புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தில் உள்ள 4.99 சதவீத பங்குகளை விற்பதற்கு, செபியிடம் ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை செயலாளர் துகிஜ் காந்தா பாண்டே கூறியுள்ளார். எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடைமுறைகள் விரைவில் துவங்கும் என, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார். இந்நிலையில், எல்ஐசி பங்குகளை விற்பதற்கான வரைவு அறிக்கை செபியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி 31,62,49,885 பங்குகள் விற்கப்பட உள்ளன. புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை. முழுவதும் அரசு பங்குகள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. மார்ச் மாதத்தில் இவை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் முகமதிப்பு ஆக இருக்கும். வெளியிடப்பட உள்ள பங்குகளில் 10 சதவீதம் வரை எல்ஐசி பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியின்படி எல்ஐசியின் மதிப்பு ரூ.5,39,686 கோடியாக உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 24 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் நாட்டின் மிகப்பெரிய, பழமையான பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த நிதியாண்டின்படி காப்பீட்டு பிரிமியம் சந்தையில் 64.1 சதவீதமும், புதிய பிரீமியத்தில் 66.2 சதவீதமும், தனிநபர் காப்பீடுகளில் 74.6 சதவீதமும், குழு காப்பீட்டில் 81.1 சதவீதமும் சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ளது.