உத்தரபிரதேச மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தல், மேற்கு உ.பி.யின் 11 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது.
இதில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட ராம்பூர் மாவட்டத்தின் 5 தொகுதிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படு கிறது. 2017 தேர்தலில் 3 தொகுதிகள் பாஜக வசம் சென்றன.
ராம்பூர், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கானின் சொந்த மாவட்டம் ஆகும். 2019-ல் முதல் முறை மக்களவை எம்.பி.யான ஆசம் கான், சமாஜ்வாதியின் முக்கிய முஸ்லிம் தலைவர் ஆவார். இவர் இல்லாத தேர்தலை சமாஜ்வாதி கட்சி முதல்முறையாக சந்திக் கிறது. உ.பி.யில் பாஜக ஆட்சி அமைந்ததும் ஆசம்கான் மீது படிப்படியாக 350 வழக்குகள் பதிவாகின. இதனால், சிறையில் சிக்கியவருக்கு உச்ச நீதிமன்றம் சென்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் ஆசம்கான் முதல் முறையாக சிறையிலிருந்தபடி தனது ராம்பூர் நகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். ராம்பூர் நகரம் தொகுதியில் ஆசம்கான், கடந்த தேர்தல்களில் தொடர்ந்து 9 முறை வென்றுள்ளார். இவர் மீது வழக்குகள் பதிவாகக் காரணமான ஆகாஷ் சக்ஸேனா, பாஜக சார்பில் இவரை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர், பாஜக முன்னாள் அமைச்சர் ஷிவ் பகதூர் சக்ஸேனாவின் மகன்.
இதே மாவட்டத்தின் ஸ்வேர் தொகுதியில் ஆசம்கானின் மகன் அப்துல்லா ஆசம் 2017-ல் முதல் முறை வென்றார். ஆனால், வயதை குறைத்து காட்டி போட்டியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சிறையிலிருந்த அப்துல்லா வுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இவர், மீண்டும் ஸ்வேர் தொகுதியில் போட்டியிடுகிறார். ராம்பூர் மாவட்டத்தின் ஊரகத் தொகுதியில் ஆசம்கானின் மனைவி தன்ஜீம் பாத்திமா மீண்டும் போட்டியிடுகிறார். இவர் அதே தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆவார். தாயும், மகனும் தங்கள் தொகுதியுடன் கூடுதலாக ஆசம்கான் தொகுதியிலும் தீவிரப் பிரச்சாரம் செய்கின்றனர்.
ராம்பூரின் மற்றொரு முக்கிய முகமான ஜெயப்பிரதாவும் இந்த முறை உ.பி. தேர்தலில் இடம் பெறவில்லை. இவர், 1994-ல் என்.டி.ராமாராவ் அழைப்பின் பேரில் அவரது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அரசியலுக்கு வந்தார். பிறகு சமாஜ்வாதி பொதுச் செயலாளராக இருந்த அமர் சிங் மூலம் சமாஜ்வாதிக்கு அழைத்து வரப்பட்டார். சமாஜ்வாதி சார்பில் 2004, 2009-ல் ராம்பூர் எம்.பி.யானார். ஆனால், அவருக்கும் ஆசம்கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.
அதனால், அமர் சிங்கும் ஜெயப்பிரதாவும் 2010-ல் சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்டனர். பிறகு அமர்சிங்கின் புதிய கட்சியிலும் ஜெயப்பிரதாவுக்கு பலன் கிடைக்க வில்லை. அமர்சிங் மறைந்த பிறகு பாஜகவில் இணைந்த ஜெயப்பிரதா, 2019 மக்களவைத் தேர்தலில் ராம்பூரில் ஆசம்கானை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 2 பேருமே இல்லாமல் தேர்தலை சந்திக்கிறது ராம்பூர்.