கோவை: தேர்தல் முடிந்ததும் நீட் பிரச்சினையை மறந்து திமுகவினர் தூங்கிவிடுவார்கள், அடுத்த தேர்தலில் கையில் எடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் 28-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உண்ணாமலையை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை இன்று (ஜன.13) பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் நேரடி கருத்து மோதல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் 80 சதவீதம் பாஜகவை தாக்கிதான் பேசுகிறார். எனவே, இந்த தேர்தல் களம் கருத்தியல் அடிப்படையில் திமுகவா, பாஜகாவா என சென்றுகொண்டிருக்கிறது. பாஜகவை பொருத்தவரை தேசிய அளவில் உள்ளாட்சி தேர்தலில் எங்கேயும் கூட்டணி வைத்துக்கொள்வதில்லை. இந்த தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் சேவகர்களாக மாற, கட்சியினருக்கு இது ஒரு வாய்ப்பு.
அதிமுக கூட்டணியில் இருந்தபோது, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், கூட்டணியில் இருந்த எங்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியிருந்தனர். மேலும், உள்ளாட்சிக்கு வரும் 85 சதவீத நிதி மத்திய அரசு அளிப்பது. உள்ளாட்சிக்கு மாநில அரசு பெரிதாக நிதி அளிப்பது இல்லை. உள்ளாட்சியில் அனைவருமே பாஜக அரசின் பயனாளிகள். எனவே, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு உள்ளது. எனவேதான், தனித்து போட்டியிட முடிவு செய்தோம். 21 மாநகராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கான இடங்களில் தற்போது 89 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுகிறது.
மேற்கு வங்க ஆளுநரின் உத்தரவை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அளவில், மாநில அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. மாநில அரசுடன் இணைந்துதான் ஆளுநர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நிறைய இடங்களில் மாறுபட்ட கருத்துகள் வரும்போது மேற்குவங்க ஆளுநர் பொதுவெளியில் வெளிப்படையாக பேசுகிறார். இதை ஒரு ஆரோக்கியமான அரசியலாகத்தான் நான் பார்க்கிறேன். தேர்தலுக்காக, நீட் தேர்வை வைத்து திமுகவினர் தேவையில்லாமல் அரசியல் செய்து வருகின்றனர். இந்த தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் தூங்கிவிடுவார்கள். அதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு 2024 ஜனவரியில் மீண்டும் பேசுவார்கள். நீட் விவகாரத்தில் தேவையில்லாமல் தமிழக ஆளுநரை வம்பிழுத்து அவரின் மாண்பை குறைத்துள்ளனர்”என்றார்.
தினசரி தலையீடு இல்லை: 2024-ல் ஒரே நாடு ஒரே திட்டம் அமலாகும் என அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது குறித்து கேட்டதற்கு, “எந்த மாநிலத்திலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம். அது, மாநில அரசுகள் எப்படி செயலாற்றுகிறார்கள். மக்களிடையே எப்படி திட்டங்களை கொண்டு சேர்க்கின்றனர். சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதை பொருத்தது. இது முழுவதும் மாநில அரசின் கையில்தான் இருக்கிறது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு மாநில அரசுகளின் தினசரி நடவடிக்கைகளில் தலையீடு இல்லை. இதுவே, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பொருத்தவரை மத்திய அரசின் கொள்கை முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் எந்த அர்த்தத்தில் கூறினார்கள் என தெரியவில்லை. மாநிலத்தில் வேகமாக தேர்தல் நடத்த விரும்புகிறார்களா அல்லது முறையாக இந்த ஆட்சிகாலத்தை முடிக்கப்போகிறார்களா என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது”என்றார்.