புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025-26-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.26,275 கோடியை செலவிடவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது.
இந்தத் தொகையானது ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், புதிதாக பட்டாலியன்களை உருவாக்குதல், அதிநவீன ஃபாரன்சிக் (தடய அறிவியல்) ஆய்வகங்கள் உருவாக்குதல், இதர காவல் துறை கருவிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு செலவிடப்படும்.
காவல் துறையை நவீனப்படுத்துதல் (எம்பிஎஃப்) திட்டத்தின் கீழ் இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், தீவிரவாதம் பாதித்துள்ள வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்கள் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் காவல் துறையை மேம்படுத்த ரூ.18,839 கோடி செலவிடப்படும்.
மேலும் ரூ.4,846 கோடியானது மாநில காவல் துறையின் படைகளை மேம்படுத்த செலவு செய்யப்படும்.
ஃபாரன்சிக் ஆய்வகங்களை மேம்படுத்துதல், யூனியன் பிரதேசங்களில் காவல் துறையை மேம்படுத்த ரூ.2,080.50 கோடி செலவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– பிடிஐ