உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான
வாக்குப்பதிவு
இன்று தொடங்கியது. 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல், மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட
கோவா
சட்டப்பேரவை, 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கோவாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
உத்தரகாண்டில் மொத்தம் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.