பாட்டியாலா: பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அமரீந்தர் சிங்கின் கட்சிக்கு காங்கிரஸ் எம்.பி.யும், அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரணீத் கவுர் வாக்கு சேகரித்து வருகிறார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் உட்கட்சி பூசல்காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினார். பின்னர் காங்கிரஸிலிருந்தும் விலகிய அவர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். தற்போது நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து களம் காண்கிறது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி.
அமரீந்தர் சிங்கின் மனைவியான பிரணீத் கவுர், மக்களவை காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கணவர் போட்டியிடும் பாட்டியாலா (நகரம்) தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரணீத் கவுர் வாக்கு சேகரித்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாஜகவினர் நடத்திய கூட்டத்திலும் பிரணீத் கவுர் கலந்துகொண்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது.
இதுகுறித்து பிரணீத் கவுர் கூறும்போது, “நான் அமரீந்தர் சிங்கின் மனைவி என்ற அடிப் படையில் அவருக்காக வாக்கு சேகரிக்க வந்தேன். குடும்ப உறுப் பினராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதில் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. நான் என்னுடைய குடும்பத்துடன் இருக் கிறேன். எல்லாவற்றும் மேலானது குடும்பம்” என்றார்.
இதனிடையே அவர் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு செல்வது இல்லை என்ற தகவலும் வந்துள்ளது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, கணவரின் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் பஞ்சாப் மாநில வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
– பிடிஐ