ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் முச்சிந்தல் கிராமத்தில் உள்ள ஜீவா ஆசிரமத்தில், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மிகப் பெரியவர் ராமானுஜரின் புகழைப் போற்றும்விதமாக சமத்துவ சிலை வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு 120 கிலோ தங்கத்தில் ராமானுஜரின் திருவுருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது.
சமத்துவ சிலை வளாகத்தின் உள் கருவறைப் பகுதியில், பரந்த தியான மண்டபத்தை நோக்கியதாக இச்சிலை அமைந்திருக்கிறது. பக்தர்கள் இந்த தியான மண்டபத்தில் அமைதியாக தியானத்தில் ஆழலாம்.
கி.பி.1017-ம் ஆண்டில் தமிழகத்தில் பிறந்த ராமானுஜர், தீவிர வைணவர். ஆனால் சமூக கலாசாரத்திலும், பொருளாதாரத்திலும், மதத்திலும் புரட்சியை ஏற்படுத்தியவர். சமூக மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட ராமானுஜர், பல லட்சம் அடித்தட்டு மக்கள், பிறப்பு, கல்வி, பொருளாதாரம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை தடுக்கப் போராடியவர்.
முச்சிந்தல் ஆசிரமத்தில் ராமானுஜரின் தங்கத்தாலான திருவுருவச் சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்துவைத்து வணங்கினார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.