ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் … விபத்துகள் குறைந்து உயிரிழப்பும் கணிசமாக வீழ்ச்சி| Dinamalar

பெங்களூரு : அனுபவமிக்க ஓட்டுனர்களை நியமித்தது, எச்சரிக்கையாக பஸ் ஓட்டுவது குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்ற பல நடவடிக்கைகளால், பி.எம்.டி.சி., பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.தொடர்ந்து

இந்த பணிகளை மேற்கொள்ள அரசு பஸ் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான பி.எம்.டி.சி., பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஓட்டுனர்களின் அலட்சியம், அதிவேக பயணம் போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பும் அதிகரித்தது. இதன் காரணமாகவே, பி.எம்.டி.சி., பஸ்களை ‘எமன் வாகனம்’ என, பொது மக்கள் விமர்சித்தனர். பி.எம்.டி.சி., நிர்வாகம், மக்களுக்கு தரமான போக்குவரத்து வசதியை வழங்குகிறது. மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் இயங்கினாலும், பயணியருக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. ஆனால், பி.எம்.டி.சி., பஸ்களால் ஏற்படும் விபத்து, போக்குவரத்துக்கழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.கடந்த 2009ல் பி.எம்.டி.சி., பஸ்களால், 565 சாலை விபத்துகள் நடந்தன. அவற்றில், 94 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் வந்த ஆண்டுகளில், விபத்து படிப்படியாக குறைந்து, 2021ல் 89 விபத்துகள் மட்டுமே நடந்து, 26 பேர் மட்டுமே இறந்தனர். இதை தீவிரமாக கருதிய பி.எம்.டி.சி., அதிகாரிகள், பஸ்களால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காண்பித்தனர்.இதற்காக, ஓட்டுனர்களுக்கு சில பயிற்சிகளை அளித்தனர். மேலும், சாலை பாதுகாப்பு, கவனமாக பஸ் இயக்குவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.இது தொடர்பாக, பி.எம்.டி.சி., அதிகாரி ராஜேஷ் கூறியதாவது:பி.எம்.டி.சி.,யில் பணியாற்றும் ஓட்டுனர்களை, பொது மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அலட்சியமாக பஸ் ஓட்டினால், அதிவேகமாக சென்றால், மொபைல் பயன்படுத்துவதை கண்டால், அதை தங்களின் மொபைலில் பதிவு செய்து, சமூக வலை தளங்கள் வழியாக, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கின்றனர்.ஓட்டுனர்களின் மன அழுத்தத்தால், இது போன்ற தவறுகள் நடக்கிறது.

இத்தகைய ஓட்டுனர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு ‘கவுன்சலிங்’ தரப்படுகிறது. அவர்களின் பிரச்னைகளுக்கு, தீர்வு காண முயற்சிக்கிறோம்.விபத்துகளுக்கு காரணமானால், பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல், மீண்டும் பணியில் அமர, அவர்கள் படும் கஷ்டங்கள், அலட்சியத்துடன் பஸ் ஓட்டுவதால், குடும்பங்களுக்கு ஏற்படும் தொந்தரவு.மேலும், பணியின் போது செய்யும் சிறிய தவறால், பணியை இழக்க நேரிடுவது குறித்து, அவர்களுக்கு நிதானமாக விவரித்தோம்.இதன் பயனாக, பல ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் பஸ் ஓட்டுகின்றனர். விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. போக்குவரத்து நடைமுறையில், பல மேம்பாடுகள் கொண்டு வந்ததும், விபத்துகள் குறைய முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.