மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஏ.விஜயகுமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிலம் கையகப்படுத்துதலில் தாமதம், சுற்றுச்சூழல் அனுமதி, கோவிட், பயன்பாட்டு சேவைகளை மாற்றுதல், ஒப்பந்ததாரர்களால் பணிகள் மெதுவாக நடைபெறுதல் ஆகியவை காரணமாக திட்டப்பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என வலியுறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு வழங்காததால் தாமதம் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்காக நிலம் NH சட்டம், 1956 இன் விதிகளின் கீழ் கையகப்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான இழப்பீடு தொகை, தேசிய நெடுஞ்சாலை சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறயில் CALA மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 இல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையை கோரியுள்ள படி, RFCTLARR சட்டத்தின் இழப்பீட்டைத் தீர்மானிப்பது தொடர்பான விதிகள் ஜனவரி 1, 2015 முதல் NH சட்டத்திற்குப் பொருந்தும். அதன்படி, நிலம் கையகப்படுத்தல், இழப்பீடு தொகை தீர்மானிப்பது தொடர்பாக பல்வேறு சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டுள்ளது என்றார்.
அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களும் ஏதாவது ஒரு காரணத்தால் தாமதத்தை எதிர்கொள்வதாக தேசிய நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விரிவாக்கத் திட்டங்களில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், துளை மணல் கிடைக்காததுதான் என்று கூறப்படுகிறது.
அதனை கருத்தில் கொண்டு, மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்களுடன் நடத்திய உயர்மட்டக் கூட்டத்தில் முடிவில், ஆழ்துளை மணல் எடுப்பதற்காக அரசு அனாதீனம் நிலத்தை அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே அத்தகைய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் அனாதீனம் நிலங்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.