கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. டிரக் ஓட்டுநர்கள் முக்கிய சாலைகளை அடைத்துக் கொண்டு போராடுவதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்க கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கனடா தலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாடினார். போராட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும், எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றலும், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவும் உரிமை இல்லை என்றார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் நீடிக்கும் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மற்றும் கைது அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்த நிலையில், அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆர்ப்பாட்டப் பகுதிக்குள் இருந்த வாகனங்களையும் போலிஸார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா – அமெரிக்கா!
வட அமெரிக்காவின் பரபரப்பான நில எல்லையைக் கடக்கும் பாலத்தின் மீதான முற்றுகை பெரிய அளவில் விநியோகச் சங்கிலியை முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் வழியாக ஒரு நாளைக்கு சுமார் $360 மில்லியன் மதிப்பிலான சரக்குகள் இரு தரப்பிலும் கொண்டு செல்லப்படுகின்றன. இது அனைத்து அமெரிக்க-கனடா சரக்கு வர்த்தகத்தின் மதிப்பில் 25% ஆகும்.
மேலும் படிக்க | கனடாவில் வலுக்கும் போராட்டம்; ஒடாவாவில் அவசர நிலை பிரகடனம்!
முன்னதாக, கண்டாவில் டிரக் ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், அமெரிக்க-கனடா இடையிலான முக்கிய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், போராட்டத்தை தணிக்க ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை கனடாவை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?