முதல் நாள் ஏலத்தில் டெல்லி முந்தியது என்றால், இரண்டாம் நாள் ஏலத்தில், நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே, தனது வழக்கமான கம்பேக்கைக் கொடுத்துள்ளது. எந்தெந்த அணிகள் சிறப்பாகச் செயல்பட்டன, எந்தெந்த அணிகள் ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என யோசிக்க வைத்தன… ஒரு விரிவான அலசல்!
டெல்லி கேப்பிடல்ஸ்
பந்திக்கு முந்து என்பது போல, டெல்லி கேப்பிடல்ஸ் ஏலத்தில் முந்தி தனக்குத் தேவையான வீரர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டது எனச் சொல்லலாம். முதல் நாள் ஆகட்டும், இரண்டாவது நாள் ஆகட்டும், தனது அணிக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக உணர்ந்து, அடுத்தடுத்து வீரர்களைத் தூக்கினார்கள். முதல் நாள் வார்னர், மிட்செல் மார்ஷை, குறைவான விலைக்கு எடுத்தார்கள் என்றால், இரண்டாவது நாள், தனது அணிக்குத் தேவையான மொத்த ஃபாஸ்ட் பௌலர்களையும் வாங்கிவிட்டார்கள்.
சமயங்களில் ஆரம்ப விலைகளில் வரும் பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், பேக்கப் கீப்பர்கள் என வாங்கிக் குவித்து கப் அடிப்பதற்கு நாங்கள் இந்தாண்டு தயார் என அறிவித்துள்ளார்கள். பேட்டிங்கில் ஷா, வார்னர் என ஆரம்பிக்கும் படைபலம், 9வது வீரர் வரை நீள்வது டெல்லிக்கு மிகவும் சாதகமான அம்சம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஓட்டைகளைத் தேடி அடைத்து, அணியை வலுப்படுத்த முயன்றிருந்தது கேகேஆர். அவர்களது மிகப்பெரிய தலைவலியான ஓப்பனிங்கைக் கவனிக்க அலெக்ஸ் ஹேல்ஸை வாங்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக்! அதேபோல், டாப்ஆர்டரை வலுவாக்கவும் ஷெல்டன் ஜாக்சனுக்கு மாற்றான கீப்பராகவும் சாம் பில்லிங்க்ஸை வாங்கியிருந்தனர். ஆனாலும், ஓவர்சீஸ் ஸ்லாட்டில் கம்மின்ஸ், ரசல், நரைன் என்பது முடிவானதென்பதால் இவ்விருவரில் ஒருவரைத்தான் ஆடவைக்க வேண்டுமென்பதால் எதற்கும் இருக்கட்டும் என இந்திய பேட்ஸ்மேன் கம் விக்கெட் கீப்பரான பாபா இந்திரஜித்தையும் ஆரம்ப விலையிலேயே வாங்கினர்.
ரஹானே, உமேஷ் யாதவ் எனப் சில பிரபல முகங்களோடு, மொகம்மத் நபி, பஞ்சாப் லோக்கல் ஸ்டார் பிளேயர் ரமேஷ் குமார் என அணியின் பேக்கப் ஆப்சன்களிலும் கவனம் செலுத்தியிருந்தனர். ஸ்பின் டிபார்ட்மெண்ட் அசத்தலாக இருந்தாலும், டெத் பௌலர்கள் பலவீனம் வெளிப்படையாகவே தெரிகிறது. அதேபோல், வேகப்பந்தை எதிர்கொள்ளத் தடுமாறும் டாப்ஆர்டரும் பின்னடைவுதான்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
கே.எல்.ராகுலைத் தலைமையாகக் கொண்ட புது அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கோப்பைக்கான கோதாவில் நாங்களும் இறங்கத் தயார் என பல நட்சத்திர வீரர்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுலுடன் களமிறங்க குவின்டன் டி காக் போன்ற ஒரு அதிரடி ஓப்பனர், மனிஷ் பாண்டே போன்ற ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஹோல்டர், ஸ்டோயின்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் குர்ணால் பாண்டியா, தீபக் ஹுடா போன்ற ஃபினிஷர்கள், மார்க் உட், அவேஷ் கான் போன்ற அதிவேகப்பந்து வீச்சாளர்கள் பிஷ்னோய் நதீம் போன்ற ஸ்பின்னர்கள் என எல்லா பாக்ஸிலும் டிக் அடித்துள்ளது லக்னோ.
முதல் தர வீரர்களுக்கே அதிகத் தொகையை செலவழித்து விட்டதால், பேக்கப் வீரர்களைப் பெரிதாக எடுக்க முடியவில்லை. இரண்டாவது நாளில் ஆரம்ப விலையில் வந்த வீரர்களையே பெரும்பாலும் வாங்க வேண்டியது இருந்தது. முதல் தர வீரர்கள் போட்டிகளின் போது காயம் அடையாத பட்சத்தில், தொடர் முழுவதும் கடும்போட்டியைக் கொடுக்க லக்னோ காத்துக் கொண்டிருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஒவ்வொரு முறையும் ‘ஈ சாலா கப் நம்தே’ எனச் சொல்லி களம் இறங்கும் ஆர்சிபி, இந்தாண்டாவது அதை நிகழ்த்திக் காட்டுமா என்று ஏதிர்பார்த்தால் வழக்கமாகச் செய்யும் தவறான அதிக விலைக்கு வெளிநாட்டு வீரர்களை வாங்குவது, இந்திய ஸ்டிராங்க் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எடுக்காமல் இருப்பது என அதையே மீண்டும் ஒருமுறை செய்துள்ளது. டு ப்ளஸ்ஸி, ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், ஹேசல்வுட் என வீரர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து எடுத்துள்ளது. ஆனால், இவர்களை விட்டால் வேறு எந்த நல்ல வீரர்களையும் எடுக்கவில்லை, எடுப்பதற்கு பணமும் இல்லை.
ஆர்சிபியில் வழக்கமான பிரச்னை 5, 6-வது இடங்களுக்கு, சரியான பேட்ஸ்மேன்கள் இல்லாதது, அதைச் சரி செய்ய தினேஷ் கார்த்திக்கை 6-வது இடத்திற்கு எடுத்தாலும், டாப் ஆர்டர் சரியும்போது அவரின் ஆட்டத்திறனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 5-வது இடத்திற்கு இன்னமும் ஒரு நிலையான வீரரை எடுக்காதது எனப் பழைய தவற்றையே மீண்டும் செய்துள்ளது ஆர்சிபி. இப்போது அவர்கள் முன் இருக்கும் கேள்வி போனவருடம் விலகிய கோலியையே கேப்டனாகத் தொடர வைப்பார்களா அல்லது மேக்ஸ்வெல், டு ப்ளஸ்ஸி போன்ற வீரர்களிடம் செல்வார்களா என்பதைப் பொறுத்துத்தான் ஆர்சிபியின் கோப்பைக் கனவு இருக்கிறது.
Also Read: IPL Auction 2022: எல்லைச்சாமி சிஎஸ்கேவுக்கு இல்லை சாமி… டு ப்ளெஸ்ஸி இல்லாத சென்னை, இனி எப்படி?!
பஞ்சாப் கிங்ஸ்
ஆரம்ப நாளில் தவான், ஷாருக்கான், ராகுல் சஹார் ஆகிய மூன்று தரமான வீரர்களுக்காகச் செலவழித்ததில் கிட்டத்தட்ட சரிபாதியான 11.50 கோடியை லிவிங்ஸ்டன் ஒருவருக்காக நேற்று தந்தது பஞ்சாப். அண்டர் 19 ஸ்டாரான ராஜ் பவாவினை எதிர்காலத்திற்கான முதலீடாக ரூ.2 கோடி கொடுத்து வாங்கிய பஞ்சாப், யாஷ் துல்லுக்காகவும் முயன்றது. ஆனால், அதில் டெல்லி வென்றது. ரபாடா பெரிய பலம்தான் என்றாலும், அவருக்கு பேக்கப்பாக ஒரு ஓவர்சீஸ் வேகப்பந்து வீச்சாளரை பஞ்சாப் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அக்குறையைத் தீர்க்கும் வகையில் ஓடியன் ஸ்மித் மற்றும் நாதன் எல்லீஸை பஞ்சாப் எடுத்தது. பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ரபாடா, ஓடியன் ஸ்மித்தான் பெரும்பாலும் அவர்களது ஓவர்சீஸ் ஸ்லாட்டை நிரப்பும் வீரராக இருப்பார்கள் அல்லது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே கொடியேற்றும் அவர்களது பழைய நடைமுறை தொடரலாம். ராகுல் சஹாருக்கு இணையான ஒரு பேக்கப் ஸ்பின் பௌலர் இல்லாதது அணிக்கு சற்றே பின்னடைவு.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
வார்னரை ஓரங்கட்டியதிலிருந்து மோசமான தோல்விகள் வரை, சோதனைக் காலகட்டமாகவே சன்ரைசர்ஸுக்கு போன சீசன் அமைந்தது. தவற்றை எல்லாம் நேர் செய்யும் வகையில், இம்முறை நல்ல வீரர்களை தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ். பேக்கப் வீரர்கள் உட்பட, ஒரு இரண்டாவது பிளேயிங் லெவனைக் கட்டமைக்கும் அளவிற்கு வீரர்களை எடுத்துள்ளது. வழக்கமான மிடில் ஆர்டர் பிரச்னையைத் தீர்க்க மார்கரம், திரிபாதி நிக்கோலஸ் பூரனை எடுத்ததோடு, ஃபினிஷிங்கிற்காக ஹோல்டர் இருந்த இடத்தை நிரப்ப செப்பர்ட் மற்றும் அப்துல் சமாத்தை எடுத்து இருக்கிறார்கள்.
கேன் வில்லியம்சனும் காயத்திலிருந்து வெளிவருவது நல்ல அறிகுறி. மேட்ச் வின்னரான ரஷித்துக்கான மாற்று வீரர்தான் கிடைக்கவில்லைதான் எனினும், ஸ்பின்னுக்கு சுந்தர், சுஷித், அபிஷேக் ஷர்மாவைக் கொண்டு சமாளிக்கலாம். இந்திய ஃபாஸ்ட் பௌலிங்கை மட்டும் நம்பி இல்லாமல் மார்கோ ஜான்சன், சீன் அப்போட்டையும் எடுத்திருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்கள் கூட பௌலிங் ஆல்ரவுண்டர்களாக அமைய, எப்பொழுதும் போல் பௌலிங்கில் கைவரிசை காட்ட உள்ளது சன்ரைசர்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல்லில் அனுபவம் இல்லாத புதிய அணி ஏலத்திற்கு வந்தால், தடுமாறும் என்பதை நிருபிப்பது போல், ஏலத்தில் பல நேரங்களில் செய்வதறியாது தவித்தது குஜராத் டைட்டன்ஸ். இரண்டாம் நாள் மாலை வரை, தனது அணிக்கான கீப்பரையே யார் என்று முடிவு செய்யாமல் ஏலத்தில் உட்காந்திருந்தது அவர்களது அனுபவமின்மையை அப்பட்டமாகக் காட்டியது. மிடில் ஆர்டர் வரிசையில் நல்ல பேட்ஸ்மேன்களை இறுதிவரை இவர்கள் எடுக்கவே இல்லை. எடுத்த அனைத்து பேட்ஸ்மேன்களும் ஃபினிஷர் ரோலில் இருப்பதே அணிக்குச் சற்று பின்னடைவுதான்.
பாண்டியா, ரஷித் கான், சுபம் கில் என்ற வீரர்களுடன் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ், லக்னோ போல் ஸ்மார்ட்டாகச் செயல்படாமல் ஏலத்தில் சற்று மந்தமாகவே இருந்தது எனச் சொல்லலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக வீரர்களை எடுத்து வைத்துள்ள அணியை ஒருங்கிணைந்து, ஒரு அணியாக முதலில் உருவாக்குதே இவர்களுக்கு உள்ள முதல் பணியாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
நான்கு ஓப்பனர்களையுமே டாப் 4-ல் ஆட வைக்கப்போகிறார்களா என்று முதல் நாளில் சற்றே வியப்புக்குள்ளாக்கினாலும் ஓரளவிற்கு சில சிறந்த வீரர்களை வளைத்துப் போட்டிருந்தது ராஜஸ்தான். முதலில், இரண்டாவது நாளின் பெரும்பாலான பகுதி அவர்களுக்கு சுமாராகவே நகர்ந்தது. ஆனால், தங்களது பர்ஸை இறுகப் பிடித்துவைத்து, எதிரணிகளின் பணமெல்லாம் காலியாகும்வரை காத்திருந்து, இறுதி நிமிடங்களில் ஹோல்சேல் வியாபாரமாக வான் டர் டஸன், கூல்டர் நைல், நீசம், டேரியல் மிட்சல் என நான்கு ஓவர்சீஸ் வீரர்களை வெறும் 5.25 கோடிக்கு திட்டம் போட்டுத் தூக்கி ஃபைனல் பஞ்ச் கொடுத்து அசத்தியது.
முதல் நாளின் ஆக்ஷன் ஹீரோ டெல்லி என்றால், இறுதி நொடிகளில் ராஜஸ்தான் அதகளப்படுத்தியது. அட்டாக்கிங் டாப்ஆர்டர் பேட்ஸ்மென்கள், பலம் பொருந்திய வேகப்பந்து மற்றும் ஸ்பின் என எல்லாமே சரியாகச் சேர்ந்துள்ளது. ஆயினும், போல்ட் மற்றும் பிரஷித் இருவருமே நியூபால் பௌர்கள்தான் என்பதால் டெத்பௌலிங் எனுமிடத்தில் சற்றே ஆட்டம் காண்கிறது ராஜஸ்தான்.
மும்பை இந்தியன்ஸ்
5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை மற்ற அணிகளுக்குக் கோப்பையை வெல்ல வாய்ப்புக் கொடுக்கலாம் என எண்ணியுள்ளது என்றே சொல்லலாம். அவர்கள் இந்த வருடப் போட்டிளுக்கு ஆள் எடுக்காமல், அடுத்தடுத்து வர இருக்கும் போட்டிகளுக்கு முக்கியமான பௌலர் வேண்டும் என நினைத்து காயத்தில் இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு வாங்கியுள்ளார்கள்.
மேலும் 13 அன்கேப்ட் டொமெஸ்டிக் வீரர்களை வாங்கியுள்ளது. இவை அனைத்தும் எதிர்கால சீசன்களுக்காகத் தயார்படுத்தப்பட இருக்கும் அணியே ஒழிய இந்தாண்டுக்கான அணியாக இது இல்லை என்றே கூறலாம். வழக்கமாக ஃபாஸ்ட் பௌலிங்கில் ஸ்ட்ராங்காகத் திகழும் மும்பை இந்த முறை பும்ராவை மட்டுமே நம்பிக் களம் இறங்கவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
பழைய கோர் அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கிய சிஎஸ்கே, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. முதல் நாள் பதுங்கினார்கள் என்றால் இரண்டாவது நாள் ஏலத்தில் பாய்ந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். இரண்டாவது நாள் ஏலத்தில் டெவன் கான்வே, சிவம் துபே, மிட்சல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டன், பிரிட்டோரியஸ், திக்சேனா, ஆடம் மில்னே, ராஜ்வர்த்தன் ஹங்கர்கேக்கர், உள்ளூர்ப் பசங்களான ஜெகதீசன், ஹரி நிஷாந்த் என பெரிய பட்டாளத்தையே வாங்கிக்
குவித்து விட்டார்கள். ருதுராஜ் உடன் ஓப்பனிங் ஆட, கான்வேவை எடுத்துள்ளார்கள்.
டு ப்ளஸ்ஸி கொடுத்த அதிரடித் தொடக்கத்தைக் கான்வே கொடுப்பாரா அல்லது அவரை மிடில் ஆர்டரில் இறக்கிவிட்டு உத்தப்பா அல்லது அம்பதி ராயுடுவை மீண்டும் ஓப்பனிங் கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரோவாவுக்கு பேக்கப்பாக பிரிட்டோரியஸை எடுத்துள்ளார்கள். பொதுவாக, ஸ்பின்னர்கள் நிறைந்து காணப்படும் சிஎஸ்கே இந்த முறை, அதை சற்றே குறைத்துள்ளது எனலாம். டெத் ஓவர்களில் பிராவோவுடன் இணைந்து வீச, கிறிஸ் ஜோர்டன் பயன்படுத்தபடலாம்.
Also Read: IPL Auction 2022: பழசும் இளசும் கலந்த CSK… எப்படி இருக்கு இந்தப் புதிய சென்னை சூப்பர் கிங்ஸ்?
பேப்பர் அளவில், பல அணிகள் சிறப்பானதாகவும், ஒரு சில அணிகள் குறைகள் நிறைந்தும் காணப்பட்டாலும், இதில் சரியான பிளேயிங் லெவனைக் கட்டமைத்து, களத்தில் சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் செயல்படும் அணிதான் வெற்றிகளைச் சுவைக்க முடியும்.
எது எப்படியோ, களைத்து போடப்பட்ட கார்டுகளில் ஆடப்படும் புதுப் போட்டி, சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.