மும்பை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை சரிவுக்குப் பின் வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் இருக்கும் என ரீடைல் முதலீட்டாளர்கள் நம்பி காத்திருந்தனர்.
ஆனால் நடந்தது மொத்தமும் வேறு, 3 முக்கிய காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 1857 புள்ளிகள் வரையில் சரிந்ததோடு, நிஃப்டி வங்கி, ஆட்டோ, நிதியியல் சேவை, பிஎம்சிஜி, மெட்டல், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல் எஸ்டேட், கன்ஸ்யூமர் என அனைத்து முக்கியத் துறைகளும் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக சரிவில் மட்டும் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 8.2 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இந்த மோசமான சரிவை பதிவு செய்ய அந்த 3 முக்கியக் காரணம் என்ன..? இனி வரும் காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தை எப்படியிருக்கும்.
ரஷ்யா – உக்ரைன் எல்லை பிரச்சனை
கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் எல்லை பிரச்சனை அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ரஷ்ய – உக்ரைன் எல்லையில் 1.4 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தை ரஷ்யா தனது பிரம்மாண்ட ஆயுதப் படைகள் உடன் களமிறக்கியுள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை
நாளுக்கு நாள் ரஷ்யா உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து வரும் நிலையிலும், பல நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் காரணத்தால் ரஷ்யா வலிமை அடைந்து வருகிறது. மேலும் வல்லரசு நாடுகள் ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என எச்சரித்தும் ரஷ்யா உக்ரைன் நாட்டைக் கைப்பற்றும் திட்டத்தில் உறுதியாக உள்ளது.
ஜோ பைடன் – விளாடிமிர் புடின்
இந்நிலையில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஒரு மணிநேரம் வீடியோ வாயிலாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தக் கூட்டத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் மத்தியில் எவ்விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையும் நிலை உருவாகியுள்ளது.
ஐரோப்பா, பிரிட்டனுக்கு அதிகப் பாதிப்பு
இது ரஷ்ய – உக்ரைன் நாடுகளை மட்டும் அல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளைப் பெரிய அளவில் பாதிக்க உள்ளது. இதன் எதிரொலியாக இன்று மொத்த ஆசிய சந்தையும் இன்று சரிவுடன் துவங்கியுள்ளது.
3வது கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடு
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தால் அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகள் ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்கும். ரஷ்யா உலகின் 3வது கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தால் இந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மொத்தமாகத் தடைப்படும். இதன் வாயிலாக இன்று கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பேரல் 95 டாலரைத் தாண்டி 7 வருட உயர்வை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் ஒரு நாட்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனக் கூற தேவையில்லை.
அமெரிக்கப் பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் கணிக்கப்பட்ட அளவீட்டை விடவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அமெரிக்கப் பெடரல் வங்கி ஏற்கனவே திட்டமிட்ட மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் மொத்த அமெரிக்க, ஆசிய சந்தையும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
NATO படைகள்
வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி அளவீட்டைப் பாதிக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வட்டி விகித உயர்வுகள் இருக்கும் இதேவேளையில் உலக நாடுகளில் போர் மூழும் அபாயமும் உருவாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் NATO படைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ், நிஃப்டி
இந்தச் சூழ்நிலையில் தான் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடும் 1500 புள்ளிக்கும் அதிகமான சரிவையும், நிஃப்டி 420 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவையும் எதிர்கொண்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
மேலும் இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து வரும் காரணத்தால் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வும் இல்லாமல் இருக்கிறது, தேர்தல் முடிந்தால் எப்படி இந்திய வாடிக்கையாளர்கள் 25 சதவீத பெட்ரோல் விலை உயர்வை எதிர்கொள்வார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
What led Sensex crash 1500 points today? What investors need to know before Investing
What led Sensex to crash 1500 points today? What investors need to know before Investing சென்செக்ஸ் குறியீடு 1500 புள்ளிகள் சரிவுக்கு என்ன காரணம்..?!