உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், கோவா, பஞ்சாப், மனிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்களாகவும் உள்ள நிலையில், நடைபெற்று வரும் தேர்தலில் இந்த மாநிலங்களில் ஆட்சியை கைபற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இதனிடையே, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியை அழிக்க பிரியங்கா,
ராகுல் காந்தி
ஆகியோரே போதும் என்றார். மேலும், ஏற்கெனவே இங்கு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வாய்ப்பும், எதிர்காலமும் இல்லை. அப்படியிருக்க அக்காவும், தம்பியும் சேர்ந்து அதை இன்னும் கீழே இழுத்துச் செல்வார்கள். காங்கிரஸின் அழிவிற்கு ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காதியும் மட்டுமே போதும் என்றும்
யோகி ஆதித்யநாத்
தெரிவித்தார்.
முன்னதாக, பிரியங்கா காந்திக்கும் அவரது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கும் இடையே பிளவு ஏற்படக்கூடும் என யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், என் சகோதரர் ராகுல் காந்திக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன் என்று
பிரியங்கா காந்தி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சகோதரருக்காக எனது உயிரையே தியாகம் செய்ய முடியும், அதேபோல் ராகுல் காந்தியாலும் எனக்கு அதையே செய்ய முடியும். பாஜகவில் மோதல் உள்ளது. ஆனால், காங்கிரஸில் இல்லை. யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே பிளவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.