நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுக- பாஜக கூட்டணியாக போட்டியிடுவதன் மூலம் எளிதாக வெற்றிப்பெறலாம் என தொண்டர்கள் எண்ணிய நிலையில், இரு கட்சிகளும் தற்போது தனித்து போட்டியிடுகின்றன.
அதன் காரணமாக, திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீஜா அறிவிக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் முருகேசன் தனது மகளுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இவர் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 வரை நாகர்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பதவியில் இருந்த காலத்தில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பின்னர், 2017இல் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதாக நாஞ்சில் முருகேசனை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிமுக தலைமை நீக்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற நாஞ்சில் முருகேசன் தொடர்ந்து முயற்சித்து வந்தார். அதற்கு பலனாக, நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராக அதிமுக அறிவித்தது
இந்நிலையில், வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான குமார், இரணியல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நான் எனது மனைவி விஜயஸ்ரீ மற்றும் இருமகள்களுடன் வசித்துவருகிறேன். என் மனைவிக்கும் நாஞ்சில் முருகேசனுக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை நான் நேற்று இரவு பார்த்துவிட்டேன். உடனே என்னை நாஞ்சில் முருகேசனும், அவரது ஓட்டுனர் மகேஷும் இணைந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்” என குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குமார் புகாரின்பேரில், முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.