வார்சா:
ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன.
போர் மூண்டால் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறுவார்கள். அவ்வாறு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்து நாடு தயாராக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் தூதரக பணிகளைக் குறைக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் அதிக அளவில் வெளியேற்றும்போது ஏற்படும் சிரமத்தை போக்குவதற்காக தனது தூதரக நடவடிக்கைகளை தொடர்வதாக போலந்து கூறுகிறது.
அதேசமயம் உக்ரைனில் நிலைமை மோசமடையாது என்று நம்புவதாக போலந்து வெளியுறவுத்துறை துணை மந்திரி பிரசிடாக்ஸ் தெரிவித்தார். உள்துறை அமைச்சகம் பல வாரங்களாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.