பனாஜி:
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்
காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது. பகல் 1 மணி நிலவரப்படி கோவாவில் 44.63 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 35.21 சதவீத வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 39.07 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது. 5 மணி நிலவரப்படி கோவாவில் 75.29 சதவீதம், உத்தரகாண்டில் 59.37 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 60.44 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவாவில் 78.55 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 59.51 சதவீத வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 61.20 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்தபின்னர், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.