புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைவர்களில் சிலர் தம் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்துள்ளனர். இதற்கு அம்மாநில விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்புவது காரணமாக எனக் கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாபில் 2007 மற்றும் 2012 இல் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த சிரோமணி அகாலி தளம் கட்சியுடன்(எஸ்ஏடி) கூட்டணி அமைத்திருந்தது பாஜக. தனது தலைமையிலான மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டதிருத்தங்களை எதிர்த்து எஸ்ஏடி கூட்டணியிலிருந்து விலகியது.
இதன் காரணமாக, பாஜக பஞ்சாபில் முதன்முறையாக தம் தலைமையிலானக் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனுடன், காங்கிரஸின் முன்னாள் முதல்வரான கேப்டன்.அம்ரீந்தர்சிங்கின் பஞ்சாப் மற்றும் கிஸான் சம்யூத் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில், பாஜக ஆளும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், பஞ்சாபின் ஊரகப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்தார். பிப்ரவரி 12 ஆம் தேதிக்கான முதல்வர் கட்டரின் பிரச்சாரம் ரத்து செய்திருந்தது தெரிந்துள்ளது.
இதேபோல், மக்களவை எம்.பியும் பாலிவுட் நடிகையுமான ஹேமாமாலினியின் பஞ்சாப் மாநிலப் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கானக் காரணங்கள் என்னவென்பது குறிப்பிடப்படவில்லை.
குறிப்பாக பஞ்சாபில் மல்வா பிராந்தியப் பகுதிகளில் பாஜகவினர் பிரச்சாரம் செய்யத் தயங்குவதாகக் கருதப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் கூட தனது பிரச்சாரப் பயணத்தை மாற்றி அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மல்வா பகுதியில் விவசாய சங்கத்தினர் அதிகம் இருப்பது காரணமாகவும் கூறப்படுகிறது. மல்வாவின் டாகோண்டா மற்றும் உக்ரஹான் பகுதிகளின் விவசாயிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இச்சூழலில், மால்வாவின் அபோஹர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. இத்தொகுதி, கடந்த பல தேர்தல்களாக பாஜகவின் வெற்றித் தொகுதியாக இருந்து வருகிறது.
அதே நாளில் பஞ்சாபின் ஜலந்தரிலும் பிரதமர் மோடி நேரடிப் பிரச்சாரக் கூட்டம் நடத்த உள்ளார். இவருக்கும் எதிர்ப்பு கிளம்பி விடாமல் இருக்கும் பொருட்டு, பஞ்சாபின் காவல்துறை சார்பில் விவசாய சங்கத்தின் தலைவர்கள் வளைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை குறிப்பிட்டு பஞ்சாப் கிஸான் யூனியன் தலைவர்களான ராஜேவால் மற்றும் அமர்ஜோத்சிங் ஜோதி விடீயோ பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இதனால், குறிப்பிட்ட தேதியில் பிரதமர் மோடியின் கூட்டம் நடைபெறுமா? எனவும் கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி 5 இல் பஞ்சாபின் பெரோஸ்பூரின் விழாவிற்கு வந்த பிரதமர் மோடி திரும்பி சென்றதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு காரணம் எனச் சர்ச்சை எழுந்திருந்தது நினைவுகூரத்தக்கது.