சென்னை: “‘2024 முதல் நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப் போகிறது’ என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேமாகப் பேசினார்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகரத்துக்கு செய்யப்பட்ட சாதனைகளை விளக்கிய அவர், “திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான், ‘அமைதிப்படை’யாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள். அதிமுக அஸ்தமனத்தில் இருக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கட்சி, அதிமுக.
சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சி, ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்த கட்சிதான் அதிமுக. அடுத்து நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுத்தமாகக் காணாமல் போன கட்சியும் அதிமுகதான். இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப்போகின்ற கட்சிதான் அதிமுக. அவர்களுக்கு ஆக்கபூர்வமான அரசியல் தெரியாது. அடிமைத்தனம்தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாம், அமாவாசை அரசியல்தான்.
2024 முதல் நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப் போகிறது என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான், இதெல்லாம் தெரியும் போல. கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி. பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட அவ்வாறு கனவு காணாதீர்கள்.
கூவத்தூரில் தவழ்ந்து போய் ஆட்சியைப் பிடித்தவர் என்று நினைக்கிறீர்களா? சசிகலாவின் காலைப் பிடித்து பதவியைப் பெற்று, சசிகலா காலை வாரி தனது பதவியை நிலைப்படுத்திக் கொண்டு, தனது நாற்காலியை நான்காண்டு காலம் காப்பாற்றுவதற்காக, பாஜகவிற்குப் பாதம் தாங்குவதையே வழக்கமாக வைத்திருந்து, டெல்லிக்குக் காவடி எடுத்த சுயநலத்தின் மொத்த உருவம்தான் நீங்கள்.
சசிகலாவைப் பார்த்தால் பயம். ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்த்தால் பயம், டெல்லியைப் பார்த்தால் பயம். கொடநாடு பங்களா என்று சொன்னாலே பயம் என்று அஞ்சி நடுங்கி வாழும் பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பார்த்துப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு? பழனிசாமியின் இதுபோன்ற பொறுப்பற்ற – ஆணவப் பேச்சுக்களுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதுதான் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்” என்று ஸ்டாலின் பேசினார்.