வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 77 லட்சம் மோசடி செய்ததாக திமுக வட்ட செயலாளர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலந்தூர் வேம்புலி சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் மனோகர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கடந்த 2019ஆம் ஆண்டு வீடு வாங்க விரும்பிய போது, ரியல் எஸ்டேட் அதிபரும், 165-வது வார்டு திமுக வட்ட செயலாளருமான ஜெகதீஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இவர், வேளச்சேரியில் தனக்கு சொந்தமாக 1204 சதுர அடி கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு 87 லட்சம் எனவும் முதல் தவணையாக 40லட்சம் ரூபாய் கொடுத்தால் விற்பனை பத்திரம் தருவதாக ஜெகதீஷ்வரன் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி 40 லட்சம் ரூபாயை ஜெகதீஷ்வரனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும், அந்த நிலத்தில் வில்லங்கம் இருந்ததால் மீண்டும் வேறொரு இடமான ஆதம்பாக்கம் கிராமத்தில் ஜெகதீஷ்வரன் தனக்கு காண்பித்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த நிலத்தின் மதிப்பு 97 லட்சம் என்பதால் மேலும் 37 லட்சம் கொடுத்தால் உடனடியாக விற்பனை பத்திரம் கொடுப்பதாக கூறியதால் நம்பி அவரிடம் பணம் அளித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் 2 வருடங்களாகியும் பத்திரப்பதிவு செய்து தராமல் இருந்ததால், அந்த இடம் குறித்து விசாரித்த போது, ஏற்கனவே கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு ஜெகதீஷ்வரன் விற்றது தெரியவந்ததாகவும், கடந்த 2 வருடங்களாக கொடுத்த பணத்தையும் தராமல் ஏமாற்றிவரும் ஜெகதீஷ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஜெகதீஷ்வரன் மீது நம்பிக்கை மோசடி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மனோகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ’77லட்சம் ரூபாய் பணத்தை திமுக வட்ட செயலாளர் ஜெகதீஷ்வரனிடம் கேட்ட போது தான் ஆளுங்கட்சியில் இருப்பதாகவும், தன்னை ஒன்றும் செய்யமுடியாது எனவும், மேலும் தனது மனைவி 163வது வார்டு வேட்பாளராக நிற்பதாகவும், வெற்றி பெற்ற பிறகு பார்த்து கொள்வதாக மிரட்டுவதாகவும்’ தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM