லக்னோ: உத்தராகண்ட், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் 2-ஆம் கட்ட தேர்தலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 51.93% வாக்குகள் பதிவாகின. கோவாவில் 60.18% மற்றும் உத்தராகண்டில் 49.24% வாக்குகள் பதிவாகின.
கோவா மாநிலத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: கோவா சட்டப்பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி கோவாவில் 60.18% வாக்குகள் பதிவாகின. “கோவா மாநிலத்தில் காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாங்கள் மிக அதிகமான சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்” என கோவா தலைமை தேர்தல் ஆணையர் குனால் தெரிவித்திருந்த நிலையில், 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 60.18% வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
60 தொகுதிகளில் வெற்றி – தாமி நம்பிக்கை: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி உத்தராகண்டில் 49.24% வாக்குப்பதிவாகின.
உத்தராகண்ட் முதல்வரும் கடிமா தொகுதி பாஜக வேட்பாளருமான புஷ்கர் சிங் தாமி தனது வாக்கை செலுத்திவிட்டு அளித்தப் பேட்டியில், “நமது அனைத்து திட்டங்களும் உத்தராகண்ட் மாநில மக்களுக்கு பெருந்துணையாக இருக்கிறது. மக்களுக்கு யார் வளர்ச்சியை உறுதி செய்வார்கள் எனத் தெரிந்துவைத்துள்ளனர். உத்தராகண்ட் மக்கள் பாஜகவுக்கு 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்றுத்தருவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உ.பி.யில் 51.93% வாக்குப்பதிவு: 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா,படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 51.93 % வாக்குகள் பதிவாகின.