புதுடில்லி : தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆன்மிக குரு, சித்ராவின் சிகை அலங்காரம் குறித்து யோசனைகள் சொன்னதாகவும், அவருடன் செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றதாகவும், ‘செபி’ அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புஎன்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, 2013 – 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தேசிய பங்கு சந்தையின் குழு இயக்க அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு அதிக சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தியது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானது. தேசிய பங்கு சந்தையில் வேறு எந்த மூத்த அதிகாரிக்கும் வழங்கப்படாத அளவு, ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் ஆனந்த் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் பணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் மூன்று முறை அவருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து செபி உத்தரவிட்டது. விசாரணைஇந்த விவகாரத்தில், இமயமலையில் வசிக்கும் சித்ராவின் ஆன்மிக குருவுக்கு தொடர்பு இருப்பதாகவும், ‘இ – மெயில்’ வாயிலாக அவரது ஆலோசனைகளை பெற்றே பல முக்கிய அலுவல் முடிவுகளை சித்ரா எடுத்ததாகவும் செபி விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆன்மிக குருவின் பரிந்துரையின்படி தான், ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டதாகவும், அவருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் செபி தெரிவித்துள்ளது.
‘அந்த ஆன்மிக குருவுக்கு உருவம் கிடையாது’ என, சித்ரா கூறி வருகிறார். ஆனால், சித்ராவின் இ – மெயில் முகவரியை ஆராய்ந்த செபி அதிகாரிகள், சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுஉள்ளனர். அதன் விபரம்:ஆன்மிக குருவும், சித்ராவும் 2015ல் பலமுறை சந்தித்துள்ளனர். 2015 பிப்., 18ல் சித்ராவுக்கு வந்துள்ள இ – மெயில் செய்தியில், எப்படிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவர் அழகாக தெரிவார் என்பது குறித்து ஆன்மிக குரு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 பிப். 17ல் அனுப்பிய மெயிலில், கிழக்கு ஆப்ரிக்க நாடான செஷல்சுக்கு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்துள்ளார்.இதை ஏற்று அவர் சென்றுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement