ஆளுநர்களுக்கு எதிராக
பாஜக
அல்லாத முதல்வர்களை அணி திரட்டத் திட்டமிட்டுள்ளார் மேற்கு வங்காள முதல்வர்
மமதா பானர்ஜி
. அவரது இந்த அதிரடியின் பின்னணியில் பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அகில இந்திய அளவில் அதிரடியான முதல்வர் ஒருவரைப் பார்த்து ரொம்ப காலமாகி விட்டது. முன்பு என்.டி. ராமாராவ் இருந்தார். தனக்கோ தனது அரசுக்கோ ஏதாவது பிரச்சினை வந்தால் டெல்லியை முகாமிட்டு அதிர வைத்து விடுவார்.
1984ம் ஆண்டு என்டிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்தார். அப்போது நிதியமைச்சராக இருந்த பாஸ்கர ராவ் மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது காங்கிரஸ் கட்சி. பாஸ்கர் ராவை அப்போதைய ஆந்திர மாநில ஆளுநர் தாக்கூர் ராம் லால் முதல்வராக நியமித்தார். பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த என்டிஆரும் அதிர்ச்சி அடைந்தார். சிகிச்சையை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார். திரும்பிய வேகத்தில் தனது கட்சி எம்எல்ஏக்களோடு ராஜ்பவனுக்குப் படையெடுத்தார். ஆளுநர் முன்பு தனது எம்.எல்.ஏக்களை அணிவகுத்து ஆதரவு எனக்குத்தான் உள்ளது என்று கூறி முறையிட்டார். ஆளுநர் கேட்கவில்லை. ஆனால் என்டிஆரும் விடவில்லை.
சைதன்ய ரதத்தைக் கையில் எடுத்தார். ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அனல் பறக்கப் பேசினார். மக்கள் ஆதரவைத் திரட்டினார். அத்தோடு தனது கட்சி எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் அபகரித்து விடக் கூடாது என்பதற்காக கர்நாடக மாநிலத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார். அங்கு முதல்வராக இருந்தவர் என்டிஆரின் நண்பரான ராமகிருஷ்ண ஹெக்டே. அவர் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக தங்க வைத்தார்.
ஆந்திரா முழுவதும் என்டிஆர் அலை ஓங்கி வீச ஆரம்பித்ததைப் பார்த்து பயந்து போன அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, வேறு வழியில்லாமல் பணிந்து வந்தார். ஆளுநர் ராம் லால் நீக்கப்பட்டார். புதிய ஆளுநராக சங்கர் தயாள் சர்மா நியமிக்கப்பட்டார். பாஸ்கர் ராவ் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். மீண்டும் முதல்வரானார் என்டிஆர்.
கிட்டத்தட்ட இப்போது என்டிஆர் போலத்தான் செயல்பட்டு வருகிறார் மமதா பானர்ஜி. பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் அவர் போர்க்குணத்துடன் செயல்படுகிறார். தற்போது ஆளுநர் மூலம் இன்னொரு போருக்கு மமதா தயாராகி விட்டார்.
ஆளுநர் தங்கர், மேற்கு வங்காள சட்டசபையை முடித்து வைத்துள்ளது மமதாவை கொந்தளிக்க வைத்துள்ளது. இதையே காரணமாக வைத்து தேசிய அளவில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பாஜகவுக்கு எதிராக கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அவர்களை தன் பக்கம் இழுத்து கூட்டணியை வலுவாக்க மமதா திட்டமிட்டுள்ளார்.
இதன் மதல் கட்டமாக பாஜக அல்லாத முதல்வர்களின் கூட்டத்தை அவர் கூட்ட திட்டமிட்டுள்ளார். இதில் மமதா, மு.க.ஸ்டாலின், கே.சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயன்,
உத்தவ் தாக்கரே
உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பெருமளவிலான முதல்வர்களை கலந்து கொள்ள வைத்து விட்டால் அதுவே தனக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றியாக மமதா கருதுகிறார்.
மமதாவின் இந்த முயற்சிக்கு கே.சந்திரசேகர ராவ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் சமீப காலமாக தேசிய அரசியலுக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார். மமதாவுடன் கை கோர்த்து தேசிய அரசியலில் புகுந்து என்.டி.ஆர். பாணியில் தேசிய அரசியலைக் கலக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மமதா எடுத்து வைத்து வரும் இந்த புதிய முயற்சிகள் தேசிய அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகத்தான் தெரியும்.