தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 609 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 826 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் அரசியல் கட்சிகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பிரச்சாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், சோர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.