பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுவிய தேசிய கிரிக்கெட் அகாடமி 2000-ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதான வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இளம் வீரர்களுக்கு பயிற்சி மற்றும் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை அளிப்பது தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிரதான பணியாகும்.
இந்த நிலையில் கூடுதல் வசதி வாய்ப்புகளுடன் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் தேவனஹள்ளி என்ற இடத்தில் 40 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலத்தை கிரிக்கெட் வாரியம் 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றுள்ளது.
புதிய அகாடமிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, தேசிய அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓராண்டுக்குள் புதிய அகாடமி தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 மைதானங்கள் அமைகிறது. அவற்றில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த முடியும்.