பதிலடி கொடுக்கப்படும்
மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் தன்னை அணுகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய முகமைகளின் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் அதற்கு பயப்படபோவதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் அஞ்சப்போவதில்லை. இதேபோல சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே குடும்பத்தின் மீது கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் மத்திய முகமைகளின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
ஜெயிலில் பா.ஜனதா தலைவர்கள்
பா.ஜனதாவினர் அந்த தலைவர் அல்லது இந்த தலைவர் அனில்தேஷ்முக்கிற்கு பக்கத்து லாக்அப்பிற்கு செல்லப்போவதாக கூறி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் பா.ஜனதாவை சேர்ந்த சிலர் அனில்தேஷ்முக்கின் லாக்அப்பில் அடைக்கப்பட போகிறார்கள் என நினைக்கிறேன். அனில்தேஷ்முக் வெளியே வந்துவிடுவார். இதனால் அவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். நான் என்ன சொல்கிறேன் என எல்லோருக்கும் தெரியும். யார், யார் ஜெயிலுக்கு போகப்போகிறார்கள் என்பதை கட்சி தலைவர்கள் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவசேனா தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.