இயக்குனரின் உரிமை : சுருளி பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது.
காட்டிற்குள் ஒளிந்திருக்கும் கொள்ளையர்களை தேடி போலீசார் செல்வது போல இந்தப்படத்தின் கதை அமைந்திருந்தது. அதேசமயம் இந்த படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் படத்தை ஒடிடியில் ஒளிபரப்ப கூடாது என்றும் திருச்சூரை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
ஒடிடியில் வெளியான இந்தப்படம் சென்சார் செய்யப்படாமலேயே வெளியானது என்பதால் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அதிகாரிகள் குழு ஒன்று இந்தப்படத்தை பார்த்து தங்களது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து, இந்த படத்தை ஒடிடியில் வெளியிட எந்த தடையும் இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதுமட்டுமல்ல நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, “காட்டிற்குள் ஒளிந்து வாழும் கொள்ளையர்கள் நல்லவிதமான வாரத்தைகளை தான் பேசுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா..? ஒரு படத்தை இயல்பாக உருவாக்க வேண்டும் என்கிற இயக்குனரின் படைப்பு சுதந்திரத்தில் நாம் ஓரளவுக்கு மேல் குறுக்கிட முடியாது.. தவிர இந்தப்படம் பார்வையாளரே விரும்பினால் மட்டும் பணம் கட்டி விரும்பி பார்க்கும் விதமாக வெளியாகி இருக்கிறதே தவிர, யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்க சொல்லவில்லை. அதனால் இந்த வழக்கை தங்களது சொந்த பப்ளிசிட்டிக்காவே தொடர்ந்துள்ளார்கள் என தெரிய வருகிறது” என மனுதாரருக்கு குட்டும் வைத்து இந்தப்படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டார்.