சென்னை: சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ஒருவருக்கு வலிப்புவந்தால் சாவி, இரும்பு பொருட்களை அவரிடம் கொடுக்கக்கூடாது. நினைவு திரும்பும் வரைதண்ணீர் தரக்கூடாது என்று கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: வலிப்பு நோய் என்பது மூளையில்ஏற்படும் பாதிப்பால் வருகிறது. இது தொற்று நோய் அல்ல. வலிப்புநோய் மனவியாதி அல்ல. வலிப்புக்கான மாத்திரை, மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கூடவே மருந்துகளை எடுத்துச் செல்லவும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை மறுபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 5 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து வலிப்பு இருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப நினைவு திரும்பாமல் வலிப்பு வந்து கொண்டிருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். தகுந்தசிகிச்சையை உடனே அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்பட லாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள், நீர்நிலைகள், இயந்திரங்கள் அருகே செல்லும்போதும், சமைக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்கள் அவர்களின் பெயர், முகவரி,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், வலிப்பு நோய்பற்றிய விவரம் அடங்கிய அடையாள அட்டை ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
வலிப்பு வரும்போது சாவி மற்றும் இரும்பு பொருட்களை கொடுக்கக்கூடாது. நினைவு வரும் வரை நோயாளிக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது. நோயாளியை ஒரு பக்கமாக திருப்பி படுக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.