விராட் கோலியின் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை – பேட்டிங் பயிற்சியாளர் ரதோர் பேட்டி

கொல்கத்தா,
இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை. அவர் நன்றாக ஆடுகிறார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ரதோர் கூறினார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ெவஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (இரவு 7.30 மணி) நடக்கிறது.

இதையொட்டி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நேற்று காணொலி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய வீரர் விராட் கோலி கடந்த ஆண்டு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்துள்ளார். இப்போது அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு ரன் எடுக்க தடுமாறுவதாக நான் நினைக்கவில்லை. குறிப்பிட்டு அது குறித்து நான் கோலியிடம் விவாதிக்கவில்லை. 
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவருக்கு மோசமானதாக அமைந்தது (3 ஆட்டத்தில் 26 ரன்) உண்மை தான். ஆனால் அவர் வலை பயிற்சியில் நன்றாகவே பேட்டிங் செய்கிறார். போட்டிக்கு அவர் தயாராகி வரும் விதத்தை பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அவர் ரன் குவிப்பார் என்று நம்புகிறேன். அவரது பார்ம் குறித்து கவலைப்பட எதுவும் இல்லை.
அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. அங்குள்ள சூழலில் நன்றாக செயல்படும் திறமை நமது பேட்ஸ்மேன்களிடம் இருக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு வலுவான அணியை உருவாக்கும் நோக்குடன் தயாராகி வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக தற்போது சில வீரர்களின் காயத்தால் லேசாக தடுமாறுகிறோம்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை தொடக்க வீரராக ஆட வைக்க அணி நிர்வாகம் விரும்புகிறதா என்று கேட்கிறீர்கள். அது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆடுகளத்தை பார்த்து விட்டு, அதன் தன்மை எப்படி இருக்கும் என்பதை ஆலோசித்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம். காயத்தால் லோகேஷ் ராகுல் அணியில் இடம் பெறவில்லை. என்றாலும் தொடக்க வீரர் வரிசைக்கு இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளனர். எனவே யார் தொடக்க வீரர் என்பதை பார்க்கலாம்.
ரிஷாப் பண்ட் அற்புதமான வீரர். எப்போதும் அவரால் முன்வரிசையில் அருமையாக விளையாட முடியும். ஆனால் அணியின் நிலைமை மற்றும் தேவையை பொறுத்தே அவரது பேட்டிங் வரிசை அமையும். 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகும் அணியில் முக்கியமான வீரராக அவர் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை மிடில் வரிசையிலோ அல்லது பின்வரிசையிலோ மிகவும் துல்லியமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் சவாலான மிடில் வரிசையில் விளையாடுவதற்கு நம்மிடம் போதுமான இடக்கை பேட்ஸ்மேன்கள் இல்லை.
பரிசோதனை முயற்சி தேவை என்பதை நம்புகிறவன் நான். ஆனால் அதை விட தொடரை வெல்வது எங்களுக்கு முக்கியம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் சவால் மிக்க அணி. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில் போட்டியை சிறப்பாக தொடங்கி தொடரை கைப்பற்றுவது முக்கியம்.
இவ்வாறு ரதோர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.