உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளின் எல்லைகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில், இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் உக்ரைனில் இருந்து வெளியேறும்படி தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு பல்வேறு விமான நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்துள்ளன.
உச்சகட்ட போர் பதற்றம் – மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் ரத்து!
இந்நிலையில், உச்சகட்ட போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய தேவையின்றி உக்ரைனில் உள்ள மாணவர்கள் வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், அத்தியாவசிய தேவையின்றி உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு நாளை தொடங்கலாம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளது போர் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.