சென்னை:
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். எனவே, தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக வினாத்தாளை கசியவிட்டிருக்கலாம் என புகார் எழுந்தது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஒருபுறம் விசாரணை செய்து வந்தாலும், இன்னொருபுறம் இந்த திருப்புதல் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும், அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
மாணவர்களை பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. 3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது, என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நாளை நடைபெற உள்ள பிளஸ்2 இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் வினாத்தாள் வெளியாவது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.