பாட்னா: கால்நடைத் தீவன 5-வது ஊழல் வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வரவேற்றுள்ளார். பிஹாரை கொள்ளையடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் தற்போது உடல்நலக்குறைவால் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இந்தநிலையில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஞ்சி தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கப்படவுள்ளது.
இதனிடையே ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதை பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மாநிலங்களவை எம்.பி.யுமான சுஷில் குமார் மோடி வரவேற்றுள்ளார்.
பிஹாரை கொள்ளையடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்படுகிறார்கள் என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறுகைில் ‘‘சிபிஐ விசாரணை கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுகினோம். பிஹாரைக் கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லாலு பிரசாத் பிஹார் மாநில அரசியலுக்கு பொருந்தாதவரகி விட்டார்’’ எனக் கூறினார்.