தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சியை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், 45-வது சென்னை புத்தக காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை முதல் நடைபெறும் என்று தெரித்தனர். மேலும் இப்புத்தக காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தனர்.
மேலும், தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும் எனவும், தொடக்க நாளில் கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். புத்தக காட்சிக்கு வரும் வாசகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக தடுப்பூசி சிறப்பு முகாம் செயல்படும் என்றும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புத்தக காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்படுவதாகவும், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பதிப்பகங்கள் உட்பட 500-க்கும் அதிகமான பதிப்பகங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பணைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். வழக்கம் போல் 10 விழுக்காடு சலுகை விலையில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.