குடியிருப்பு கட்டுமானத்தின்போது கட்டுமான நிறுவனம் கடன் தவணை கட்டத் தவறினால் வாடிக்கையாளரின் நலன் காக்கப்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடன் தவணையைக் கட்ட கட்டுமான நிறுவனம் தவறியதால், கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ள வீடுகளை ஏலம் விட கடன் கொடுத்த வங்கி முடிவு செய்தது. அதற்கு ரெரா எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ரெராவின் அதிகார வரம்பிற்குள் வங்கிகள் வராது என்றும் வங்கிகள் ஒன்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களல்ல என்றும் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, கட்டுமான நிறுவனத்திடம் கடனை வசூலிப்பதில் ரெரா தலையிட முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்படாத குடியிருப்பை ரெராவின் வசம் ஒப்படைப்பதே சரியானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், வங்கியா, வாடிக்கையாளரா என்று பார்க்கும்போது வாடிக்கையாளர்களின் நலனே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தவணை தவறிய கட்டுமான நிறுவனத்தின் கடனை வசூலிக்க, கட்டுமானத்தை ஏலம் விடுவதற்கு ரெரா விதித்த தடை செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM