மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கியநிலையில் படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர், இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். அப்போது அவர் சந்தித்த பிரச்சனைகளை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமானது.
ஏற்கனவே இந்தப்படத்தின் ட்ரைலர், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தமிழில் நடிகர் சூர்யாவும், இந்தியில் நடிகர் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். நடிகை சிம்ரன், மாதவனுக்கு ஜோடியாக இந்தப் படத்தின் மூலம் 3-வது முறையாக இணைந்துள்ளார்.