உக்ரைன் எல்லையில் இருந்து முகாம்களுக்கு திரும்பும் ரஷிய படைகள்

மாஸ்கோ:
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடான ரஷியா இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்புவதாக ரஷ்யா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ரஷியா உக்ரைன் மீது உடனடியாக போர் தொடுக்க திட்டமிடாமல் இருக்கலாம். 
டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் ரெயிலில் ஏற்றப்பட்டிருந்த புகைப்படத்தையும், ராணுவ இசைக்குழு இசைக்கும் போது ஒரு டேங்க் கமாண்டர் தனது படைகளுக்கு சல்யூட் அடிக்கும் புகைப்படத்தையும் ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆனால் துருப்புக்கள் எந்த பகுதியிலிருந்து பின்வாங்குகிறார்கள், எத்தனை வீரர்கள்? அவர்கள் எங்கு நிறுத்தப்படுவார்கள்? என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 
இதன்மூலம் உக்ரைன் எல்லைகளில் ரஷியா படைகளை குறைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை உக்ரைன் தலைவர்கள் நம்பவில்லை. படைகள் வெளியேறுவதை நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவோம் என கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.