அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 10 வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2021 நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இதற்கு BA.1 என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இப்போது உலகளவில் உள்ள 96% தொற்றுக்கு BA.1, BA.1.1 திரிபுகளே காரணமாக உள்ளன. இதுதவிர BA.2, BA.3 கண்டறியப்பட்டன. ஆனால் இப்போது BA.2 திரிபு அதிகமாகப் பரவிவருவதாக ஜிஐஎஸ்ஏஐடி அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பெறப்படும் கரோனா வைரஸ் மரபணு வரிசைத்தொடர்களை இந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் BA.2, என்ற உரு, இயல் மாற்றமடைந்து (mutation) புதிய துணை ஒமைக்ரான் வகை அதிவேகமாகப் பரவக் கூடியது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பில் கோவிட் நிபுணர் குழு உறுப்பினரான மரியா வான் கெர்கோவ், “இதுவரை BA.2, என்ற ஒமைக்ரானின் புதிய துணை வகை திரிபு குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. இப்போதைக்கு இது 57 நாடுகளில் உள்ளது. இது ஒமைக்ரானைவிட அதிவேகமாகப் பரவுகிறது. ஆனால் ஒமைக்ரானைப் போல் குறைந்த நோய்த் தன்மையே கொண்டுள்ளதா என்பதை இன்னும் உறுதிபடுத்த இயலவில்லை” என்று கூறினார்.
டெல்டா, ஒமைக்ரான் என எந்த வகை உருமாறிய வைரஸாக இருந்தாலும் சரி இதுவரை உலகளவில் கரோனா கொடிய நோயாகவே உள்ளது ஆகையால் மக்கள் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த வைரஸ் இன்னும் உலகை விட்டு அகலவில்லை, இன்னும் உருமாறிக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும். வைரஸிடம் தொடர்பில் வருவதை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.