புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில், ஹரியானாவிலிருந்து பிக்கு எருமைகளும், பசுமாடுகளும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்திருப்பதாக குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
பிஹாரின் முதல்வராக இருந்த லாலுவின் ஆட்சியில் கால்நடை தீவன வழக்குகள் பதிவானது. இதனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த லாலு மீதான ஊழல் வழக்குகள் ஜார்க்கண்டின் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்டின் ராஞ்சியிலுள்ள சிபிஐ விசாரித்தவற்றில் இதுவரை நான்கு வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. இன்று வெளியான ஐந்தாவது வழக்கிலும் ஆர்ஜேடி தலைவர் லாலு மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ரூ.139 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் பதிவாகி இருந்தது. இதற்காக தொரந்தாவின் கருவூலத்தில் எடுக்கப்பட்ட தொகையின் செலவில் 400 கால்நடைகளுக்கான கணக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த கால்நடைகள் அனைத்தும் ஹரியானா மற்றும் டெல்லியிலிருந்து பிஹாரின் பலவேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில், 164 எருமைகள் மற்றும் 65 பசு மாடுகளை வாகனங்களில் கொண்டு வர வாடகையாக ரூ.14 லட்சத்து 4 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் பதிவான எண்களை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இவை அனைத்தும் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் எண்கள் எனத் தெரிந்துள்ளது. இதுபோல், கால்நடைகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்வது சாத்தியமல்ல என்பதால் லாலு சிக்கியுள்ளார். இதேவகையில், வெளிமாநிலங்களில் இருந்து பிஹாருக்கு ஆடுகளும் இருசக்கர வாகனங்களில் அனுப்பியதாக பதிவுகள் இருந்தன.
இந்த ஆடுகளுக்காக ரூ.77 லட்சத்து 46 ஆயிரம் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீவனமாக சோளம், பாதாம் மற்றும் பேக்கரியின் கேக்குகள் உள்ளிட்டவை அளித்ததாக பல லட்சங்கள் கணக்கு எழுதப்பட்டுள்ளன.
இந்நிலையில், லாலு மற்றும் அவரது மனைவியான பிஹாரின் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மீதும் வழக்குகள் பதிவாகின. கடந்த 1998-இல் இருவரும் தம் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகள் சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஜுன் 9, 2000-இல் வெளியான தன் தீர்ப்பில் லாலு மற்றும் ராப்ரி மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதன் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றத்தால் இருவர் மீதான வழக்கு ஜார்க்கண்டின் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மீது கடந்த 2006-இல் வெளியான தீர்ப்பில் லாலு, ராப்ரி விடுவிக்கப்பட்டனர்