`திமுக பொங்கல் கரும்பு கொள்முதலில் அடித்த பணத்தை உள்ளாட்சித் தேர்தலில் செலவிடுகிறது' – அண்ணாமலை

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு உப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் சின்ன ஆஸ்பத்திரி அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை காலை 9 மணிக்கு வந்து விடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் வருவதற்கு தாமதமானதால் மேடையில் ரஜினி பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தனர். நேரம் ஆக… ஆக கூட்டம் கலையத் தொடங்க அண்ணாமலை வந்து விட்டதாக கூறி பட்டாசு வெடித்து கூட்டம் கலையாமல் பார்த்து கொண்டனர் நிர்வாகிகள்.

அண்ணாமலை வந்த பிறகு சால்வை அணிவிப்பவர்கள் அவருடன் நின்று செல்ஃபி எடுத்து கொண்டு நேரத்தை கடத்த கூடாது, அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தெற்கு மாவட்டத் தலைவரான பண்ணைவயல் இளங்கோ மைக்கிலேயே அறிவுரை வழங்கினார். சரியாக 11.40 மணிக்கு வந்த அண்ணாமலைக்கு நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பி.ஜே.பி தமிழக தலைவர் அண்ணாமலை

கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்து பூரித்த அண்ணாமலை தனக்கு வைக்க வந்த மலர் கிரீடத்தை வாங்கி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளரான ஜெய்சதீஷ் தலையில் வைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசத் தொடங்கி அண்ணாமலை, “மாநில துணைத் தலைவரான கருப்பு முருகானந்தத்தை சிங்கம் என சொல்லக்கூடாது கருப்பு தங்கம் என்றே சொல்ல வேண்டும் அவர் சூறாவளியாக சுழன்று தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.

பிரசாரம் இன்னும் இரண்டு நாள்களில் முடிவடையும் நிலையில், இந்த பத்து நாள்களில் பல்வேறு கட்சியினர் பிரசாரத்திற்கு வந்திருப்பார்கள். உங்கள் ஓட்டுகளை அவர்களுக்கு தான் போட வேண்டும் எனச் சொல்லி அவர்களுடைய சாதனைகளையும் சொல்லி இருப்பார்கள். எட்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்க கூடிய பிரதமர் மோடியின் கட்சி களத்தில் உள்ளது. இன்னொரு புறம் களத்தில் இருப்பது எட்டு மாதங்களாக ஆட்சியில் இருக்ககூடிய தி.மு.க.

தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை

உள்ளாட்சி பணிகளுக்கு வரும் நிதி எல்லாம் மத்திய அரசு வழங்கும் நிதி தான். மாநில அரசு எந்த நிதியையும் உள்ளாட்சிக்கு வழங்குவது கிடையாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புதான் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கியது எல்லாம். ஸ்மார்ட் சிட்டி, சாக்கடை, சாலை வசதிகள் எல்லாம் மாநகராட்சிகளில் செய்யப்படும் பணிகளுக்கு மத்திய அரசு தான் நிதி வழங்குகிறது அல்லது மத்திய அரசின் நபார்டு வங்கி மூலம் மாநில அரசு பெற்று திட்டத்தை செயல்படுத்தும்.

வரக்கூடிய பணத்தை முறையாக பயன்படுத்தாமல், லஞ்ச லாவானியத்திற்காக 40 சதவிகிதம் வரை கமிஷனாக எடுத்துக்கொண்டு, கடைசியாக மக்களுக்கு பயன்படக்கூடிய பணிகள் செய்யும் போது, அதில் எந்த பயனும் இல்லாமல் போய் விடுகிறது. அந்த பணிகளில் குறைகள் ஏற்படுகிறது .எனவே தான், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒதுக்கப்படும் நிதியானது மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பது தான்.

அண்ணாமலை

தி.மு.க அரசு கிட்டதட்ட எட்டு மாதங்களாக விடிந்து விட்டதாக ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுப்பதற்காக அரசு கரும்பு கொள்முதலுக்கு 40 ரூபாய் விலை நிர்ணயம் செய்தது. ஆனால், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஒரு கரும்பு ரூ.25 வீதம் விவசாயிகளிடமிருந்து வாங்கினர். ஒரு கரும்பில் மட்டும் தி.மு.க-வினர் ரூ.15 அடித்ததுள்ளனர். இதன் மூலம் மொத்தம் கரும்பில் மட்டும் 33 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, அந்த பணத்தை எடுத்து கொண்டு தற்போது உள்ளாட்சித் தேர்தலில் செலவு செய்து சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

எட்டு மாத காலமாக ஆட்சியிலிருக்கிறது தி.மு.க அரசு. இந்த தேர்தலில் 40 சதவிகிதம் பேர் வாக்களிக்கின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு கேட்க, வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு ஓட்டு போட சொல்லி கேட்கிறார். எப்படி அவரை நம்புவது. வீட்டிலிருந்து வெளியே வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தருவதாக சொன்னது என்னாச்சு என கேட்பார்கள். அதற்காகவே வருவதில்லை. வீதிக்கு வந்து மக்களின் கேள்விக்கு பதில் அளித்து ஓட்டு கேட்கும் போது, அவரை மக்களுக்கான முதல்வர் என ஒப்புக்கொள்கிறேன்.

தஞ்சாவூர் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை

தமிழகத்தில் 2.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒரு ரேஷன் கார்டு வீதம் கணக்கிட்டால் இந்த திட்டத்திற்கு மட்டும் மாதம் 2,500 கோடி ரூபாய் செலவாகும். வருடத்திற்கு 30,000 கோடி வேண்டும். ஆனால், இதற்கான அரசானை இல்லை, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடு செய்யப்படவில்லை. அது குறித்து முதல்வர் எதுவும் பேசவில்லை. திடீரொன கடந்த இரண்டு நாள்களாக தாய்மார்களின் கோபத்தை புரிந்துக்கொண்டு ரூ1,000 கண்டிப்பாக வழங்கப்படும் என கூறி வருகிறார்கள். எங்கிருந்து வழங்குவார்கள்… ஸ்டாலின் யார் காதில் பூ சுற்றுகிறார்.

நெசவு தறி செய்த அண்ணாமலை

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சும்மா இருந்த பெண்களிடம் நகைக் கடன் வாங்கச் சொல்லி, உதயநிதி கூறினார். தேர்தலுக்கு பிறகு நகைக் கடன் இல்லை எனக் கூறிவிட்டனர். வங்கிகள் கடனுக்கான வட்டியை கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. எனவே, இந்த அரசுக்கு எந்த காரணத்திலும் மன்னிப்பு கூடாது. எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு மக்களுக்கு வர வேண்டிய கோபம் தி.மு.க-வின் எட்டு மாதகால ஆட்சியிலேயே ஏற்பட்டுள்ளது. இதையே ஸ்டாலின் சம்பாதித்துள்ளார்.

ரூ.5-க்கு மஞ்சள் பை விற்கப்படுகிறது. ஆனால், இந்திய வரலாற்றிலேயே ஒரு மஞ்சள் பையை ரூ.60க்கு தி.மு.க அரசு வாங்கி சாதனை செய்துள்ளது. இதன் மூலம் மட்டும் 130 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளனர். தைரியம் இருந்ததால் முதல்வர் இதனை மறுத்து பேசவேண்டும். எனவே, எந்த காரணத்திலும் துாக்கத்தில் கூட மறந்து தி.மு.க-விற்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அவரை கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். தி.மு.க என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு விஷயத்தை கையில் எடுத்து அதை பற்றி பேசுவார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் நீட் தேர்வு பற்றி பேசி வருகின்றனர்.

அண்ணாமலை

தேர்தலில் தி.மு.க-விற்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 2014-க்கு பிறகு மீனவர்கள் மீது எங்குமே துப்பாக்கிச் சூடு என்பது இல்லை. தற்போது மீண்டும் தி.மு.க தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறுகிறது. தி.மு.க-வும், காங்கிஸும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததே இதற்கு காரணம்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை பத்திரமாக மீட்டது மத்திய பி.ஜே.பி அரசுதான். அதன்பிறகு 57 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது. மேற்கு வங்க முதல்வருக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் பேசியுள்ளார். இதனால் தமிழக முதல்வரை மேற்கு வங்க ஆளுநர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார். ஏனென்றால் தமிழக முதல்வரின் நடவடிக்கை அப்படி இருந்தது. தற்போது நான்கு மாநில முதல்வர்கள் டெல்லியில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் என்ன பேசினாலும் ஒன்றும் நடக்காது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.