டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில் தொடர்புடைய பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. இவர்தான் ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர் ஒரு கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில் செல்லும்போது இந்த கார் விபத்து நடந்தாக சொல்லப்படுகிறது. இன்று இரவு 9:30 மணியளவில் சித்து டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற கார் டிரெய்லர் டிரக் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவருடன் பயணித்த பெண் ஒருவரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், முக்த்சரில் பிறந்த சித்து, மாடலிங் உலகில் அறிமுகமாகி 2015ல் நடிகராக அறிமுகமானார். சட்டக் கல்லூரியில் பயின்றபின் நடிப்பிற்கு வந்தவர். பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனால் பஞ்சாபிகளின் அபிமானத்தைப் பெற்றவராக விளங்கிய சித்து, பாஜக எம்பி நடிகர் சன்னி தியோலுக்கு மிக நெருக்கம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் தீப் சித்து.
விவசாயப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தீவிர ஈடுபாடு காட்டிவந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் பலனாக ஊர்வலத்தினரைச் செங்கோட்டைக்கு அழைத்துச் சென்றவர், அதன் உச்சியில் அத்துமீறிக் கொடியையும் ஏற்றியுள்ளார். இதன் மீதான வீடியோவைத் தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதுடன், ”சீக்கிய மதத்தின் குருக்களில் ஒருவரான நிஷான் சாஹேபின் கொடியை ஏற்றினேனே தவிர, அருகிலிருந்த நம் தேசியக் கொடியை நான் அகற்றவில்லை” என்று தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளியேவந்த நிலையில் தான் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.