தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள 14,520 வாக்குச்சாவடி அலுவலர்களின்
தபால் வாக்குகள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த 27,812 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டங்களாக 21 இடங்களில் ஏற்கனவே நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட அலுவலர்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் நபர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவம் 15 வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தல் பணியில் ஈடுபடும் 9,910 வாக்குச்சாவடி அலுவலர்கள், 89 சோனல் பார்ட்டி (Zonal Party) அலுவலர்கள், 70 நுண்பார்வையாளர்கள், 3,920 காவலர்கள், பிற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் 595 நபர்கள் என மொத்தம் 14,584 நபர்களுக்கு தபால் வாக்கு செலுத்த படிவம் 15 வழங்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் பணிபுரியவுள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த 4,308 நபர்களுக்கும் படிவம் 15 வழங்கப்பட்டு சம்பத்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பபட்டுள்ளன.
இதில் 15.02.2022 அன்று வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று படிவம் 15 வழங்கியுள்ள 14,584 நபர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் அவர்களின் முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை முறையாக செலுத்தி சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அல்லது 22.02.2022 அன்று காலை 8 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திலோ சேர்க்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.