லக்கிம்பூர்: “உங்களுக்கு முதல்வர், பிரதமர் வேண்டுமா? அல்லது இன்னொரு கிம் ஜோங் உன் வேண்டுமா? என யோசித்துத் தீர்மானித்து வாக்களியுங்கள்” என உத்தரப் பிரதேச மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கைத். டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் தான் இந்த திக்கைத்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹரான்பூர், பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் பிப்.14ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 60.69 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இன்னும் 5 கட்ட தேர்தல் மீதமுள்ள நிலையில், பாஜகவை சாடும் வகையில் மீண்டும் பேசியுள்ளார் திக்கைத்.
தேர்தலுக்கு முன்னர் தங்களின் அமைப்பு எந்தக் கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை என்று திக்கைத் கூறினார். ஆனால். அவர் இதுவரை பாஜகவைத் தவிர வேறு யாரையும் விமர்சிக்கவில்லை. திக்கைத், சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுக ஆதரவு தருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாஜக மீது மென்மையானப் போக்கை திக்கைத் கையாள்வதாக சமாஜ்வாதி கட்சியே ஒருமுறை விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கருத்து: உத்தரப் பிரதேசத்தில் 2 கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள இந்த நிலையில், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கைத் பாஜக மீதான தனது கண்டனத்தை மீண்டும் பதிவு செய்துள்ளார்.
இந்த முறை பாஜக ஆட்சியை அடக்குமுறை ஆட்சிக்கும், ஆட்சியாளர்களை சர்வாதிகாரியாக அறியப்படும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
லக்கிம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் தங்களை ஆட்சி செய்ய முதல்வரும், பிரதமரும் வேண்டுமா? இல்லையெலில், வட கொரியாவில் இருப்பது போல் இங்கும் ஒரு கிம் ஜோங் உன் வேண்டுமா என யோசித்துத் தீர்மானித்து வாக்களிக்க வேண்டும். நாட்டில் எந்த மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி அமையக் கூடாது. மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை புத்திசாலித்தனத்துடன் செலுத்துமாறு நாங்கள் வேண்டுகிறோம்” என்று தெரிவித்தார்.
இது யோகி, மோடி மீதான மறைமுகத் தாக்குதல் என்று உ.பி. அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, கடந்த வாரம் பாஜகவின் பிரச்சார தொனியை விமர்சித்த ராகேஷ் திக்கைத், “முசாஃபர்நகர் ஒன்றும் இந்து-முஸ்லிம் மோதல்களுக்கான கோதா அல்ல. மேற்கு உ.பி. வளர்ச்சியைக் காண விரும்புகிறது. அதனால் இங்கு வந்து இந்து, முஸ்லிம், ஜின்னா, மதம், சாதி எனப் பேசுபவர்கள் வாக்குகளை இழப்பார்கள். விவசாயிகளுக்கு எதிராக செயல்படாதவர்கள், மக்களை இந்து, முஸ்லிம் என இரு துருவங்களாகப் பிரிக்காதவர்களை, அடிப்படை பிரச்சினைகளில் அக்கறை செலுத்தி பாகிஸ்தான், ஜின்னாவை மட்டும் பேசாதவர்களையே மக்கள் ஆதரிப்பார்கள்” என்று கூறியிருந்தார்.