ஒருமுறை சென்னையில் முடிவெட்டும் கடைக்குச் சென்றபோது கடையில் இருபது வயதுக்குள் இருக்கும் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம். ஜார்க்கண்டைச் சேர்ந்த அந்தப் பையனின் பெற்றோர் கொல்கத்தாவில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அங்கே முடிவெட்டும் தொழிலில் போதிய வருமானமில்லை. தரகர் மூலம் சென்னை வந்திருக்கிறான். இங்கே உரிமையாளர் தமிழர்.
ஊதியம் பத்தாயிரம் ரூபாய். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். இலவசமென்றால் அது ஒரு தீப்பெட்டி சிறைக்கூடம். அந்த இளைஞனுக்குத் தமிழ் உணவு வகைகள் எதுவும் பிடிக்கவில்லை. குறிப்பாகப் புளி அதிகம் போட்டு செய்யப்படும் சாம்பாரை வெறுக்கிறான். மிக இளவயது என்பதால் இந்த வாழ்க்கை குறித்த எரிச்சல்கள் அவனிடம் ஏராளமிருந்தன. தனது ஊர், பண்பாடு, உணவு, நினைவுகள், திரைப்படம் அனைத்தையும் பிரிந்து சென்னையில் வாழ்வது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வேறு வழியுமில்லை.
இங்கே கொஞ்சநாள் வேலை பார்த்து விட்டு சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடை ஒன்றிற்குச் செல்ல இருப்பதாகச் சொன்னான். அங்கே ஒரு நாள் ஊதியம் ரூ. 500. முடிவெட்டுவதற்கேற்ப கமிஷன் உண்டு. ஆனால் வேலை அத்தனை எளிதில் கிடைக்காது.
தமிழகத்தில் பிற மாநிலத் தொழிலாளிகள்
தமிழகத்தின் முறைசாராத் தொழில் அத்தனையிலும் வட இந்திய, வட கிழக்கு இந்தியத் தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். கடந்த பத்திருபது ஆண்டுகளில் இது அதிகரித்திருக்கிறது. இன்றைக்கு ஒரு தேநீர்க் கடையில் வடை போடும் மாஸ்டர் வேலையைக்கூட அவர்கள் திறம்படக் கற்றிருக்கின்றனர். சமோசாவின் உலகத்திலிருந்து உளுந்த வடை போடுவதைக் கற்பது ஒரு சாதனை.
இன்னும் கட்டிட வேலை, மரச்சாமான் வேலை, மின்னியல் வேலை, சாலைபோடும் வேலை, சிறு கடைச் சிப்பந்திகள் என அவர்கள் இல்லாத துறை இல்லை. பெண்களை அழகுபடுத்தும் கடைகளில் வடகிழக்கின் பெண்கள் நூற்றுக்கணக்கில் பணிபுரிகின்றனர். முன்பெல்லாம் ராஜஸ்தானிலிருந்து வந்து வட்டிக்கடை சேட்டுக்களை மட்டுமே வட இந்தியர்களாக அறிவோம். இப்போது தமிழைச் சரளமாகப் பேசும் வட இந்தியத் தொழிலாளிகள் எங்கும் நிறைந்திருக்கின்றனர்.
இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்தங்கி இருக்கும்போது அம்மக்களுக்கு இத்தகைய இடப்பெயர்வு ஒரு வரப்பிரசாதம். அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்துத் துறைகளுக்கும் தரகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அன்றாடம் நூற்றுக்கணக்கில் வந்து இறங்குகிறார்கள். இரவில் சப்பாத்தி ரொட்டியை சுட்டுக்கொண்டு பகலில் கடும் உழைப்பில் ஈடுபடும் இவர்களுக்கு சில நூறு ரூபாய்கள்தான் ஊதியம். அதில் கால்வாசிகூட அவர்கள் மாநிலத்தில் கிடையாது.
தமிழ் மக்களின் இடப்பெயர்வு
தமிழகம் சற்று முன்னேறிய மாநிலம் என்றாலும் தமிழக் மக்களும் கணிசமாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தரும்புரி, ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பெங்களூருவுக்கு இடம் பெயர்கிறார்கள். நெல்லை வட்டாரத்திலிருந்து முன்பே மும்பைக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். டெல்டா மாவட்டங்களிலிருந்து வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது தோட்ட வேலைகளுக்காக இலங்கை, மலேசியா, பிஜித் தீவுகள், கரீபியன் தீவுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களும் அதிகம். இவர்களுக்கு இப்போது தமிழகத்தோடு தொடர்பில்லை.
தற்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கணிசமானவர்கள் உடல் உழைப்பாளிகள்தான். வெளிநாடு சென்றாலும் அவர்களுக்கு இருபது முப்பது ஆயிரம் ரூபாய் கிடைத்தால் அதிகம். அதை மிச்சப்படுத்தி ஊருக்கு அனுப்பி வீட்டிலிருப்பவரை வைத்து ஏதோ விவசாயம் செய்து சில வருடங்களில் ஒரு வீடு கட்டித் திரும்புகிறார்கள். மேலும் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளின் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் தமிழ்ப் பெண்களும் அதிகம். அவர்கள் சந்திக்கும் கொடுமைகள் சொல்லில் அடங்காது. பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து, ஊதியப் பிடித்தம், விடுமுறையின்மைவரை அத்தனை பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள்.
வெளிநாடுகளுக்குச் செல்வது என்றால் ஒரு சில இலட்சங்கள் கடன் வாங்கித் தரகர்களுக்கு கொடுத்துவிட்டே செல்ல முடியும். அவர்களது வெளிநாட்டு சம்பாத்தியத்தில் கணிசமான பகுதி இந்தக் கடனை அடைப்பதற்கே போய்விடும்.
முன்னர் கண்ட ஜார்க்ண்ட் இளைஞனுக்கு ஏற்பட்ட அன்னியமாதல் பிரச்சினை இவர்களுக்கும் உண்டு. சொந்த ஊர் பண்பாட்டை விட்டு ஏதோ ஒரு நாட்டில் பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்கிறார்கள். திருமணமாகிக் குழந்தைகளைப் பிரிந்து வெளிநாட்டில் இருப்பது எல்லாம் சகஜம்.
மேற்குலகிற்குச் செல்லும் இந்திய மக்கள்
இதேபோன்று குஜராத், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலிருந்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகளுக்குச் செல்கிறார்கள். இதில் குறிப்பிட்ட அளவுக்குச் சட்ட விரோதக் குடியேற்றம் நடக்கிறது. இது மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது என்பதால் இங்கே செலவும் அபாயமும் அதிகம். இடப்பெயர்வில் வெற்றி பெற்றால் வருமானமும் அதிகம். அமெரிக்கா இந்த உலகின் சொர்க்கம்போல அவர்களை இழுக்கிறது.
அப்படித்தான் குஜராத்தின் பட்டேல் குடும்பம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தின் சொந்த கிராமம் டிங்குச்சா. அந்த கிராமம் முழுவதும் கனடா, அமெரிக்காவில் வேலை, இவலச விண்ணப்பம், மனைவியும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரங்கள் கண்களை இழுக்கின்றன. அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் அமெரிக்காவிலோ, கனடாவிலோ பணிபுரிகிறார். இதையெல்லாம் பெருமையாகப் பேசிவந்த கிராமத்தினர் இப்போது கடும் அதிர்ச்சி காரணமாக மவுனம் காக்கின்றனர்.
ஜகதீஷ் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்
அந்தக் குடும்பத்தில் நான்கு பேர். ஜகதீஷ் பட்டேல் வயது 39, அவரது மனைவி வைஷாலி வயது 37, மகள் வைகாங்கி வயது 11, மூன்று வயது மகன் தர்மிக். அவர்கள் அனைவரும் முறையான பாஸ்போர்ட், விசாவோடு கனடாவின் டொரொண்டோ நகரில் ஜனவரி 12 இல் தரையிறங்கினர். ஜகதீஷ் தனது தந்தையை செல்பேசியில் அழைத்து பயணம் நன்றாக அமைந்தது, குளிர்தான் அதிகம், ஒன்றும் பிரச்சினை இல்லை என்று பேசியிருக்கிறார். அதுதான் அவருடைய கடைசிப் பேச்சு.
ஆறு நாட்கள் கழித்து அந்தக் குடும்பம் அமெரிக்க – கனடா எல்லையில் இருக்கும் எமர்சன் எனும் சிறு நகரத்திற்கு வருகிறார்கள். அங்கே குளிர் மைனஸ் 35 டிகிரி. குளிருக்கான உடைகள், கையுறைகள், காலுறைகள் அணிந்து அந்தக் குடும்பம் வாகனங்களின்றி அமெரிக்காவை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறது. அவர்களது நோக்கம் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைவது. அங்கே அவர்களுக்கு ஒரு வசதியான வாழ்க்கை காத்திருக்கிறது. அதற்காக இந்த இடரைக் கடக்க வேண்டும்.
ஆனால் அந்தக் கனவு பல அகதிளுக்கும், புலம்பெயர்வோருக்கும் நிறைவேறுவதில்லை. அடுத்த நாள் இரவு ஜகதீஷ் பட்டேல் குடும்பத்தினர் அமெரிக்க எல்லையிலிருந்து 12 மீட்டர் தொலைவில் குளிரில் உறைந்து இறந்து போயிருக்கின்றனர்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “இதயத்தைப் பிளக்கும் சோகம்” என்று கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சினையின் மூலம் வட அமெரிக்காவிற்குச் சட்ட விரோதமாகப் பயணிக்கும் இந்தியர்கள் பற்றிய பிரச்சினை கவனம் பெற்றுள்ளது.
வெளிநாடுகளுக்கு துரத்தும் வேலையின்மை
இந்தியா வேகமாக வளரும் நாடு என்று உணர்ச்சியறியாத புள்ளிவிவரங்கள் கூறினாலும் யதார்த்தம் நேரெதிராக இருக்கிறது. வேலையின்மை, குறைவான கூலி அனைத்தும் இந்திய மக்களை எங்கேயாவது சென்று பிழைப்போமா என்று யோசிக்க வைக்கிறது. கடந்த ஜனவரியில் பிகார் ரயில்வே துறையில் உள்ள 40,000 வேலைகளுக்கு ஒரு கோடிப் பேர் விண்ணப்பித்ததும், அதை ஒட்டிக் கலவரம் நடந்ததும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு சான்று.
மக்கள் தொகையில் 75% பேர் முறைசாராத் துறையில் இருந்தாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ தினசரி சில நூறு ரூபாய்கள்தான். பணிப் பாதுகாப்பு, இதர உரிமைகள் எதுவும் இல்லை. சமீபத்திய வருடங்களில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைக்காமல் முறைசாராத் தொழில்களுக்கே வருகின்றனர். குஜராத்தில் 95% வேலையற்றோர் அனைவரும் படித்தவர்களே.
பட்டேல் குடும்பத்தின் கிரமமான டிங்குச்சாவில் முக்கியமான தொழிலே விவசாயம்தான். பழங்கள், கோதுமை, பருத்தி, மிளகாய் போன்றவை அங்கே விளைகின்றன. இறந்துபோன ஜகதீஷ் பட்டேல் விவசாயியின் மகன். கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்புவரை அவர் காந்திநகர் அருகே ஒரு பள்ளியில் பணியாற்றியிருக்கிறார். பொது முடக்கம் காரணமாக வேலை இழந்த பிறகு அவர் சொந்த கிராமம் திரும்பி அப்பாவின் விவசாயத்திற்கும் சகோதரரின் ஆயத்த ஆடை தொழிலிலும் உதவி புரிந்திருக்கிறார். ஜகதீஷ் பட்டேல் அமைதியானவர், நேர்மையானவர், கடும் உழைப்பாளி என்று அவர் கிராமத்தினர் கூறுகின்றனர். ஆனாலும் வேலை கிடைப்பதற்கு இது போதுமானதில்லையே.
மேலும் அவர் கிராமத்தினர் அமெரிக்காவிற்கும், கனடாவற்கும் சென்று ஓரளவு நல்ல ஊதியத்தை பெறுவதை அவர் யோசித்துப் பார்த்திருக்கிறார். அதன்படி தானும் சென்றால் என்ன என்று முடிவு செய்திருக்கிறார். அந்தக் கிராமத்தில் இந்த நாடுகளுக்கு ஆள் அனுப்பும் முகவர் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. பார்வையாளர் விசா, மாணவர் விசா, சுற்றுலா விசாக்களின் மூலம் மெக்சிகோ அல்லது கனடா சென்று அங்கிருந்து சட்ட விரோதமாக அமெரிக்கா நுழைவதுதான் அவர்களது தொழில் முறை. தற்போது இந்த முகவர்கள் கண்காணிக்கப்பட்டாலும் இதை முற்றிலுமாகத் தடுப்பது கடினம்.
அந்தக் கிராமத்திலிருந்து இதுவரை 2000த்திற்கும் மேற்பட்டோர் இப்படியான வழிகளில் அமெரிக்காவற்கும், கனடாவிற்கும் சென்று வாழ்கின்றனர். அங்கிருந்து ஈட்டிய வருமானத்தைக் கொண்டு கிராமத்தில் பல கோவில்கள், ஒரு பள்ளி, காங்க்ரீட்டில் கட்டப்பட்ட வீடுகள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கின்றனர். இந்த விவரம் கிராமத்தில் இருப்போருக்கு நாமும் போனால் என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. குஜராத்தில் இருந்துகொண்டு அப்படி ஒரு சொந்த வீட்டைக் கட்ட முடியாது என்பது ஒரு யதார்த்தம்.
இறந்துபோன பட்டேல் குடும்பத்தினரை சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரும் செலவு அதிகம் என்பதால் கனடாவிலேயே நல்லடக்கம் செய்திருக்கின்றனர். பட்டேலின் உறவினர் ஜஸ்வந்த், பட்டேல் இப்படி அமெரிக்காவிற்குப் போவார் என்பதே தனக்குத் தெரியாது என்கிறார். கனடாவில் வாழும் அவர் இத்தகைய மரணங்களை இதற்கு முன்னரும் கண்டிருக்கிறார். ஆனாலும் இழப்புகளின் வலியைவிட வாழ்க்கை குறித்த கனவுக்கு வலிமை அதிகமல்லவா? சொந்த ஊரில் வழியில்லை எனும்போது இயல்பாகவே மனித மனம் எந்த இடரையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
அதே நேரம் வட அமெரிக்காவிற்குச் செல்லும் இந்த மக்கள் வழியில் மட்டும் இடரைச் சந்திக்கவில்லை. முகவர்களுக்கு அவர்கள் 17 இலட்சம் ரூபாய்வரை கட்டணம் கொடுக்க வேண்டும். இதனால் பல குடும்பங்கள் கடன் வாங்கி, சொத்துக்களை விற்று தமது குடும்ப உறுப்பினரை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன. வருமானத்தின் ஒரு சில ஆண்டுகள் இந்தக் கடனை அடைக்கவே சரியாக இருக்கும்.
சட்ட விரோத இடப்பெயர்வைத் தடுக்க முடியுமா?
தற்போது கனடா, இந்தியாவில் இருக்கும் அரசு நிர்வாகங்கள் இது குறித்து விசாரிக்கின்றன. கனடா, அமெரிக்காவில் இருக்கும் 13 சட்ட விரோத முகவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பட்டேலின் கிராமத்திற்கு அருகே உள்ள பகுதியில் இருந்த ஏழு பேர், பட்டேல் இறந்து போன கனடிய பகுதிக்கு அருகே காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.
ஆனாலும் இந்த இடப்பெயர்வு இத்தோடு நின்றுவிடாது. இது இந்தியாவிற்கும் மட்டுமான பிரச்சினை இல்லை. உலகம் முழுவதிலும் உள்ள ஏழை நாடுகளின் மக்கள் சட்ட விரோதமாக மேற்குலகிற்கு வருடந்தோறும் பயணம் செய்தவாறே இருக்கின்றனர். அவர்களின் கணிசமானோர் வழியிலயே இறந்துபோகின்றனர். இறப்பில் பாதி அளவு மத்தியதரைக் கடலில் நடக்கிறது.
இந்த நிலையில்தான் இந்தியாவை வல்லரசு என்றும், ஏழைகள் இலட்சாதிபதிகளாகிறார்கள், வேலையின்மை இல்லை என்றும் நாட்டின் பிரதமர் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அவருக்கு நேரமிருப்பின் அவருடைய சொந்த மநிலத்தில் பட்டேலின் குடும்பம் வசித்த கிராமத்திற்கு ஒரு எட்டு போய் பார்க்கட்டும். அதுதான்
உண்மையான இந்தியா
!