மின்துண்டிப்பை மேற்கொள்ளாது மின்சார சவால்களை எதிர்கொள்வது பற்றி பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இது தொடர்பான புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, பெப்ரவரி, மார்ச், ஏப்பரல் ஆகிய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்காது.எரிபொருள் தடையின்றி கிடைப்பதன் மூலம், மின் உற்பத்தி நிலையங்களில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத நிலையில் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
தனியாரிடமுள்ள பயன்படுத்தப்படாத மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துதல், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாயுச் சீராக்கிகளை பயன்படுத்துவதை குறைத்தல் போன்ற விடயங்களில் கூடுதலான கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும்ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் கூறினார்.
மின்சார சபை முன்வைத்திருக்கும் யோசனையை பரிசீலனை செய்த பின்னரே, இந்த மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை மின்துண்டிப்பை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து ,பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு புதிய ஆலோசனை வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டல்களை நிச்சயமாக நடைமுறைப்படுத்துமாறும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரான ஜனக ரத்னாயக்க, மின்சார சபைக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.