பீஜிங்,
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் ரஷிய வீராங்கனை காமிலா வலைவா ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றார். அவர் 2 நிமிடம் 40 வினாடிகள் ஸ்கேட்டிங் செய்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
முன்னதாக அவர் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அவர் 90.45 புள்ளிகள் பெற்றிருந்தார். இந்நிலையில், இம்முறை ஒலிம்பிக்கில் அவர் அதை விட குறைவாக 82.16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் முன்னிலை வகித்தார்.
இதனை தொடர்ந்து வியாழக்கிழமையன்று நடைபெறும் போட்டியில், ப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் அவர் கலந்துகொள்வார். அதில் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாது என்று ஏற்கெனவே சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிகர் ஸ்கேட்டிங் பிரிவில் பல உலக சாதனைகளை புரிந்த ரஷியாவை சேர்ந்த 15 வயது காமிலா வலைவா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதியானது.
இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னரே ஒலிம்பிக் சங்கம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும். அது வரை பதக்கம் வழங்கப்படாது.
ஆனால் அவருடைய சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தனது தாத்தாவின் இதய நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரையை கலந்து உட்கொண்டதால் தான் தடை செய்யப்பட்ட மருந்தை அவர் பயன்படுத்தியதாக முடிவு வெளியானது என்று குறிப்பிட்டுள்ளார்.