கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு

வாஷிங்டன்:

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் உருமாறிய கொரோனா வைரசுகளுக்கு எதிராகவும் தடுப்பு மருந்துகள் நல்ல பலன்களை அளிக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அது நல்ல பலனை அளிக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கர்ப்ப காலத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், கடுமையான கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது 60 சதவீதம் குறைவாக உள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 20 குழந்தை மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்ட 6 மாதங்கள் வரையிலான 379 குழந்தையிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ஆராய்ச்சியாளர் டெல்மேன் கூறும்போது, ‘தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த 6 மாதங்களுக்கு குறைவான குழந்தைகள் கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது 61 சதவீதம் குறைவாக இருந்தது.

கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 84 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பிறந்தவர்கள். தடுப்பூசி போடாத தாய்க்கு பிறந்த ஒரு குழந்தை இறந்தது.

இளம் குழந்தைகளை பாதுகாக்க தாய் வழி தடுப்பூசி மிகவும் முக்கியமான வழியாகும். தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்காக கர்ப்ப காலத்தில் எந்த நிலையிலும் தடுப்பூசி போடுவது முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… இந்தியாவில் தினசரி பாதிப்பு சற்று உயர்வு: புதிதாக 30,615 பேருக்கு கொரோனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.