அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். அதன்காரணமாக தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அந்தவகையில் விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, திமுக ஆதரவாளர் ஒருவர் அவரை பிரச்சாரம் செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவி சண்முகம் அவருக்கு சவால் விடுக்கும் வகையில் ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார்.
அதில், “பொதுமக்களே.! பார்த்துக்கொள்ளுங்கள். திமுகவினர் என்றால் இப்படித்தான். நேர்மையான விமர்சனங்களை கூட எதிர்கொள்ள முடியாமல் பிரச்சனை செய்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் நான் கிடையாது. நீ மட்டும் இல்லை உன்னுடைய பொன்முடியை வரச்சொல்லு. அவ்வளவு ஏன்? உங்களுடைய ஸ்டாலினை கூட வரச்சொல் நான் தயாராக இருக்கிறேன். இது உனக்கு மட்டுமல்ல.. காவல்துறைக்கும் நான் விடுகின்ற எச்சரிக்கை. உன் முதலமைச்சர் ஆம்பளையா இருந்தா? நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு.” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தற்போது இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்தின் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.