பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட மஞ்சப்பையை அதிக விலைக்கு வாங்கி திமுக ஊழல் செய்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ‘ மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்னையை ஏற்படுத்துகிறார். பொங்கல் தொகுப்பில் உள்ள மஞ்சள் பை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.10 மதிப்புள்ள மஞ்சள் பையை ரூ.60க்கு வாங்கியுள்ளனர்.
2.15கோடி பைக்கு ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்.மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றெல்லாம் இந்த ஆட்சி நடைபெறவில்லை. சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். அந்த கோட்டையில் பாஜக ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவர்களுக்கு செக் வைத்தால் அவர்கள் தேர்தல் அறிக்கை படி உங்களுக்கு உடனே ஆயிரம் ரூபாய் பணம் தருவார்கள். நகை கடன் தள்ளுபடி செய்வார்கள். அனைத்து தேர்தல் அறிக்கைகயும் நிறைவேற்றுவார்கள். இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்கள் சேவைக்கான ஒரு தேர்தல். 95 சதவீதம் பேருக்கு நோய் தடுப்பு ஊசி போட்டு இன்று நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் பாரத பிரதமர் மோடி.
இதற்கு தமிழக மக்கள் நன்றி சொல்ல வேண்டாமா? அந்த நன்றிக்காக நீங்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள். சென்னை இப்போது ஒரு மோசமான நிலையில் உள்ளது. மத்திய அரசு ஏராளமான திட்டங்களுக்காக நிதி ஒதுக்குகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பணம் ஒதுக்கினார்கள். ஆனால் அந்த பணம் என்ன ஆனது?. 70 ஆண்டுகளாக சென்னை மிக மோசமான நிலையில் உள்ளது.
ஒவ்வொரு மழைக்கும் பொதுமக்கள் வேட்டி புடவையை தூக்கி கொண்டு நடக்க வேண்டிய ஒரு சூழல் உள்ளது நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்கும் போது மத்திய அரசு தரும் பணம் கடைசி மனிதனுக்கும் சென்று சேரும் வகையில் அவர்கள் ஈடுபடுவார்கள். பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாமான்றத்திற்கு சென்றால் அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள். கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை வாங்கி தருவார்கள். அதனால் நீங்கள் அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM