பட்டு சேலையில் ரோபோ – உணவு பரிமாறும் அதிசயம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில், பாரம்பரிய பட்டுச் சேலை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு பரிமாறி வருவது, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய நவீன காலக் கட்டத்தில், எங்குப் பார்த்தாலும் இன்டர்நெட் வசதி, அனைவரிடமும் ஸ்மார்ட் போன் என தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி தொழில்நுட்பம் இருந்த நிலையில், தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி உலகமே பயணித்துக் கொண்டு இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைய அடைய, பல்வேறு துறைகளில் மனித வளம் குறைந்து வருகிறது. அங்கு அதற்கு பதில் நவீன ரோபோக்கள் பணி அமர்த்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு பறிப் போவதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் கால் பதித்த ரோபோக்கள், தற்போது, உணவு பரிமாறும் துறையிலும் கால் பதித்துள்ளன. அண்டை மாநிலமான கர்நாடகாவின், மைசூரு மாவட்டத்தில் உள்ள பிரபலமான சித்தார்த்தா உணவகத்தில், சப்ளையர்களுக்கு பதிலாக, ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பாரம்பரிய பட்டுச் சேலை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த ரோபோக்கள் சேவை செய்து வருகின்றன.

உணவு பரிமாறுவது எப்படி?

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம், வழக்கம்போல் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்துக் கொள்வார்கள். இந்த ஆர்டர் லிஸ்ட்டை, ரோபோவிடம் சப்ளையர் வழங்குவார். அதை ரோபோ, சமையல்காரரிடம் வழங்கும். உணவு தயாரானதும், ரோபோவிடம் உள்ள பாத்திரத்தில் வைக்கப்படும். அதை
ரோபோ
எடுத்துக் கொண்டு நகர்ந்தபடியே வாடிக்கையாளர்களின் மேஜைக்கு அருகே செல்லும். 4 மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 8 மணி நேரம் இந்த ரோபோ இயங்கும். செயற்கை நுண்ணறிவில் ரோபோ வேலை செய்கிறது. தரையில் போடப்பட்ட காந்தப் பட்டையுடன் நகரும் வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து உணவகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் டெல்லியில் இருந்து ரோபோ வாங்கப்பட்டது. மேலும் 6 ரோபோக்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது தற்போதுள்ள மனிதவளத்திற்கு துணைபுரியும். மேலும் அதிகமான வாடிக்கையாளர்களை கவரும் கூடுதல் ஈர்ப்பாகும். ஆனால் மனித வளத்திற்கு மாற்றாக ரோபோ இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.