சென்னை:
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, முதலமைச்சர் நேரில் வந்து வாக்கு சேகரிக்காத முதல் தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளதாக விமர்சனம் செய்தார். சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது:-
முதல்வர் நேரில் வந்து பிரசாரம் செய்யாமல் அவரது அறையில் இருந்து கம்ப்யூட்டரைப் பார்த்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். 2 கோடியே 64 லட்சம் பேர் ஓட்டு போடும் தேர்தலில் மாநில முதல்வர் வெளியே வந்து பிரசாரம் செய்யாத முதல் தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. ஏனென்றால் வெளியே வந்து பிரசாரம் செய்தால் ஆயிரம் ரூபாய் எங்கே? நகைக்கடன் தள்ளுபடி எங்கே? கொடுத்த வாக்குறுதி எங்கே? என நமது சகோதரிகள் கேட்பாளர்கள்.
ஆகவே, மக்களே சிந்தியுங்கள். மாற்றம் வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யாத கவுன்சிலர் சென்னைக்கு வேண்டுமென்றால் பாஜக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். கட்டப்பஞ்சாயத்து கிடையாது, நில அபகரிப்பு கிடையாது, எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் கோடிக்கணக்கான ஊழல் நடந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் சென்னையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒவ்வொரு வருடமும் மக்கள் மழைக்காலத்திற்கு அச்சப்படுகிற நிலைமைக்கு சென்னையை வெள்ளக் காடாய் மாற்றிய பெருமை முந்தைய ஆட்சியாளர்களை சாரும்.
பாஜக வேட்பாளர்கள் ஊழல் இல்லாத வேட்பாளர்கள், தன்னலமற்ற வேட்பாளர்கள், அவர்கள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் மனப்பான்மையுடன் போட்டியிடுகிறார்கள். மத்திய அரசாங்கத்தின் திட்டம் மக்களிடையே முழுமையாக சேர வேண்டுமென்றால் தாமரைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அண்ணாமலை தனது பிரசாரத்தின்போது பேசினார்.