இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், கர்நாடகாவில் நேற்று பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப்பை கழற்றிய பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கர்நாடகாவில் உள்ள ஷிவமோக கல்லூரியில், 30 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் வருவோம் எனக் கூறி வகுப்பை புறக்கணித்தனர்.
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், “ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம் மாணவிகள் முதலில் ஹிஜாப் பிறகு படிப்பு என கூறிவருவதை பார்க்கும்போது, இவர்களின் தாத்தாக்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல், இந்தியாவை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார்.
ஹிஜாப் விவகாரம் குறித்ததான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து அரசியல் அரங்கில் சர்சையைக் கிளப்பியிருக்கிறது.